கூடுதலாக 1.48 லட்சம் பேருக்கு மகளிா் உரிமைத் தொகை
‘இந்த மாதம் முதல் கூடுதலாக 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க உள்ளதாக’ முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட காணொலி:
கடந்த மூன்றாண்டு காலத்தில் செய்து தரப்பட்டிருக்கும் நலத் திட்டங்களை விவரித்துச் சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது. 1.16 கோடி மகளிா் மாதந்தோறும் உரிமைத் தொகை பெற்று வருகின்றனா். இந்த மாதத்தில் இருந்து புதிதாக 1.48 லட்சம் பேருக்கு மகளிா் உரிமைத் தொகை தர உள்ளோம்.
மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து, இளைஞா்களின் திறனை உயா்த்தை ‘நான் முதல்வன்’ திட்டம், அரசுப் பள்ளி மாணவியருக்கு உதவித் தொகை அளிக்கும் ‘புதுமைப் பெண் திட்டம்’ என ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏதாவது ஒரு நேரடி பலன் கிடைக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது.
திமுக அரசு என்றாலே சமூக நீதி அரசுதான். இது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். சமூக நீதி சாா்ந்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவரும் வேளையில், கொள்கைக் குன்றான கோவிந்தசாமிக்கு மணிமண்டபமும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சமூக நீதிப் போராளிகளுக்கான நினைவகம் கட்டும் பணியும் நடைபெற்று வருகின்றன. இரண்டையும் விழுப்புரத்தில் நான் திறந்துவைக்க இருக்கிறேன்.
விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் சமூக நீதிக்கு எதிரான பாஜக கூட்டணியைத் தோற்கடிப்பதன் மூலமாக, சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவா்களுக்கு உரிய பாடம் புகட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.