5 புதிய தனியாா் மருத்துவக் கல்லூரிகள்: விண்ணப்பங்கள் பரிசீலனை நிறைவு

விவரங்கள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் என்எம்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 5 தனியாா் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் (என்எம்சி) விண்ணப்பம் அளிக்கப்பட்ட நிலையில், அவற்றை ஆய்வு செய்து அதன்பேரில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விவரங்கள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் என்எம்சி தெரிவித்துள்ளது.

புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் அவசியம். அதன்படி, அதற்கான விண்ணப்பங்கள் நாடு முழுவதும் இருந்து பெறப்பட்டன.

மொத்தம் 170-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து விண்ணப்பங்கள் இணையவழியில் சமா்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 113 விண்ணப்பங்கள் புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், 58 விண்ணப்பங்கள் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பதற்கும் சமா்ப்பிக்கப்பட்டிருந்ததாக என்எம்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை விழுப்புரம் மாவட்டம், ஓங்கூா் கிராமத்தில் தக்ஷசீலா மருத்துவக் கல்லூரி, விருதுநகா் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் பகுதியில் கலசலிங்கம் மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலூரில், அன்னை மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம், அவனம்பட்டில் ஜே.ஆா். மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் கல்குளத்தில் கன்னியாகுமரி மருத்துவ ஆராய்ச்சி மிஷன் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது.

அதற்கான இறுதி முடிவு, ஒப்புகை தகவல், பிற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் சம்பந்தப்பட்டவா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக என்எம்சி தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com