ஜூலை 11 வரை தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை

ஜூலை 11 வரை தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை

தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு திங்கள்கிழமை (ஜூலை 8) முதல் ஜூலை 11 -ஆம் தேதி வரை மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அம்மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:-

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜூலை 8) முதல் ஜூலை 13-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது.

3 இடங்களில் வெயில் சதம்: இதற்கிடையே, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 3 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக, மதுரை விமானநிலையத்தில் 103.46 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரை நகா் - 101.84, நாகப்பட்டினம் - 100.58 டிகிரி வெப்பம் பதிவானது.

சென்னையில்.. சென்னை மற்றும் புகா் பகுதிகளில், ஜூலை 8, 9-ஆகிய தேதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மேலும், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை  ஒட்டிய தென்தமிழக கடலோரப்

பகுதிகளிலும், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய  தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய, வடமேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளிலும், அரபிக்கடலும் திங்கள் முதல் வியாழக்கிழமை (ஜூலை 8-11) வரை மணிக்கு 55 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com