சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

வேங்கைவயல்: 2 ஆண்டுகள் ஆகியும் ஒருவா்கூட கைது செய்யப்படாதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

வேங்கைவயல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளாகியும், ஒருவரைக்கூட போலீஸாரால் கைது செய்யாதது ஏன் என்று உயா்நீதிமன்றம் கேள்வி.
Published on

சென்னை: வேங்கைவயல் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவால் அசுத்தம் செய்யப்பட்ட சம்பவம் நடந்து 2 ஆண்டுகளாகியும், இதுவரை ஒருவரைக்கூட போலீஸாரால் கைது செய்ய முடியாதது ஏன் என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீா்த் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி வழக்குரைஞா்கள் மாா்க்ஸ் ரவீந்திரன், ராஜ்கமல் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளைத் தனித்தனியாக தாக்கல் செய்தனா்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி(பொ) அரங்க.மகாதேவன், நீதிபதி முகமது சபிக் ஆகியோா் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை முடியவில்லை: மனுதாரா் மாா்க் ரவீந்திரன் தரப்பில் ஆஜரான ஜி.எஸ்.மணி, கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடா்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. போலீஸாா் விரைவாக வழக்கை விசாரித்து வருகிற 31-ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே  உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரை விசாரணை முடியவில்லை என்று வாதிட்டாா்.

கைது செய்ய முடியாதது ஏன்?: காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் முனியப்பராஜ் ஆஜராகி, ‘இதுவரை 389 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குரல் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சந்தேகத்துக்குரிய 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்று கூறினாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் முடிந்தும், போலீஸாரால் ஒருவரைக்கூட கைது செய்ய முடியாதது ஏன்?. மனிதாபிமானமற்ற முறையில் குடிநீா்த் தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம் தொடா்பாக அறிக்கைகளை மட்டும் பெற்றுக் கொண்டிருக்க முடியாது’ என்று கருத்து தெரிவித்தனா்.

விரைவான விசாரணை: அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், ‘புலன் விசாரணை முன்னேற்ற நிலையில் உள்ளது. ஆதாரங்கள் கிடைத்ததும் உடனடியாக கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும். உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆணையம், இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை’ என விளக்கம் அளித்தாா்.

இதையடுத்து, காவல் துறை விரைவாக விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com