மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்: 9 மணி நேரம் நடைபெற்றது

கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு 9 மணி நேர போராட்டம்
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி.
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி, பொதுமக்கள், அதிமுகவினர் அந்த சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் 9 மணி நேரம் நடைபெற்றது.

பெங்களூரு - கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் மதுரை திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் அருகே சுங்கச்சாவடி கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட இந்தச் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் அடிப்படையில், உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கப்பலூர் சுங்கச்சாவடியில் இதுவரை இலவசமாகச் சென்ற வாகனங்களுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு ரூ. 4 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என வழக்குரைஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், புதன்கிழமை (ஜூலை 10) முதல் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதைக் கண்டித்து முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் புதன்கிழமை காலை 9 மணியளவில் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி மற்றும் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அதிமுகவினர் இந்த சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஆர்.பி.உதயகுமாரை போலீஸார் காலை 11 மணியளவில் வேனில் ஏற்றினர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த வாகனத்தைச் செல்லவிடாமல் முற்றுகையிட்டு சிறைபிடித்ததால் போலீஸார் அவரை விடுவித்தனர்.

கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை: இதைத் தொடர்ந்து, கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால், சுமார் 2 மணி நேரம் கோட்டாட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அதிகாரிகள் பதில் ஏதும் தெரிவிக்காத நிலையில், மீண்டும் கப்பலூர் சுங்கச்சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸôர் பேச்சுவார்த்தை: மாலை 6 மணியளவில் ஏ.எஸ்.பி. கருப்பையா, திருமங்கலம் டி.எஸ்.பி. அருள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வரும் திங்கள்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதுவரை உள்ளூர் வாகனங்கள் கப்பலூர் சுங்கச்சாவடியில் வழக்கம்போல கட்டணம் செலுத்தாமல் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, மாலை 6.30 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com