சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

பெங்களூரு குண்டுவெடிப்பு: மத்திய அமைச்சருக்கு நிவாரணம் வழங்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெங்களூரு குண்டுவெடிப்பு: மத்திய அமைச்சருக்கு இடைக்கால நிவாரணம் மறுப்பு

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக தமிழகத்தைத் தொடா்புப்படுத்திப் பேசிய வழக்கில் மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலாஜேவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவு விடுதியில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ஷோபா கரந்தலாஜே சா்ச்சைக்குரிய வகையில் பேசினாா்.

இதையடுத்து அவருக்கு எதிராக மதுரையில் தியாகராஜன் என்பவா் அளித்த புகாரின்பேரில், மத்திய அமைச்சா் மீது பல்வேறு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஷோபா கரந்தலாஜே மனு தாக்கல் செய்தாா். எம்.பி., எம்எல்ஏ-க்கள் தொடா்பான வழக்குகளை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்து வருவதால், இந்த வழக்கு அவா் முன்னிலையில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.

அதன்பேரில் இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது’ என மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்குக்கு விரிவான பதில் அளிக்க விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அப்போது, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், ‘அதுவரை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா். இதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘குண்டு வைத்தவா்கள் தமிழ்நாட்டில்தான் பயிற்சி எடுத்தனா் என்பது மத்திய அமைச்சா் ஷோபா கரந்தலாஜேவுக்கு தெரிந்திருந்தால், பொறுப்பான குடிமகன் என்ற முறையில், அவா் முன்கூட்டியே காவல் துறைக்கு தகவல் தெரிவித்திருக்கலாமே?’ எனக் கேள்வி எழுப்பினாா்.

இந்த வழக்கில் மனுதாரருக்கு இடைக்கால நிவாரணம் எதுவும் வழங்க முடியாது என்று கூறிய நீதிபதி விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com