புதிதாகக் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், பணியின் போது விபத்தில் உயிரிழந்த தொழிலாளருக்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் நம்பிராஜனின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்தும், இழப்பீடு கேட்டும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது, ``கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த பேறுகால மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த கட்டடத்தொழிலாளர் நம்பிராஜன் உயிரிழந்ததோடு, மேலும் இரண்டு தொழிலாளர்கள் படுகாயமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்த தம்பி நம்பிராஜன் குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
கடந்த ஓராண்டாகக் கட்டப்பட்டு வரும் கம்பம் மருத்துவமனைக் கட்டடம் விரைவில் திறக்கப்படவிருந்த நிலையில் மேல்தள தூண் இடிந்து விழுந்து விபத்து நிகழ்ந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவமனை திறக்கப்பட்ட பிறகு இப்படியொரு விபத்து நிகழ்ந்திருந்தால் எத்தகைய பேரிழப்பைச் சந்திக்க நேர்ந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது?
மருத்துவமனை கட்டுமானத்தில், அதுவும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவமனை கட்டுமானத்தைக் கூட தரமற்றதாக கட்டும், சிறிதும் பொறுப்பற்ற நிறுவனத்திற்கு தமிழக அரசு எப்படி ஒப்பந்தம் வழங்கியது? குழந்தைகளுக்கோ, பொதுமக்களுக்கோ, மருத்துவர், செவிலியர்களுக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அரசு பொறுப்பேற்குமா? அவர்களின் உயிரைத் தான் திமுக அரசால் மீட்டுத்தர முடியுமா? மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தலையீட்டில் தகுதியற்ற நிறுவனத்திற்கு முறைகேடாக ஒப்பந்தம் வழங்கப்படுவதால்தான் இதுபோன்ற தரமற்ற கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.
தமிழக அரசு உடனடியாக கம்பம் மருத்துவமனை புதிய கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்வதோடு, தரமற்ற மருத்துவமனை கட்டடத்தை எக்காரணம் கொண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரக்கூடாது. மேலும், கட்டட ஒப்பந்தத்தை ரத்துச் செய்து, தரமற்ற மருத்துவமனை கட்டடம் கட்ட காரணமானவர்களையும், அதனை அனுமதித்த அதிகாரிகளையும் கைது செய்து, அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தமிழகம் முழுவதும் அரசு சார்பாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனைகள், பள்ளிகள், குடியிருப்புகள், அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு கட்டடங்கள் அனைத்தும் தரமானதாகக் கட்டப்படுகிறதா என்பதை முழுமையாக ஆய்வு செய்யவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற தரமற்ற கட்டடங்கள் கட்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாதெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்த தம்பி நம்பிராஜன் குடும்பத்திற்கு உரிய துயர் துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு, குழந்தைகளுக்கான அவசரச் சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடம் ரூ. 12 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. புதிய கட்டடத்தின் முதல் தளத்தின் நுழைவாயில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணியின் போது, முதல் தளத்தில் கட்டப்பட்ட கான்கிரீட் தூண் திடீரென சரிந்து விழுந்ததில், மதுரையைச் சோ்ந்த நம்பிராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.