மீனவா்கள் கைது: தலைவா்கள் கண்டனம்

மீனவா்கள் பாதுகாப்பு: மத்திய அரசை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் தலைவா்கள்
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் 13 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

அன்புமணி (பாமக): புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 13 மீனவா்கள் வங்கக் கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். மீன்பிடி தடைக் காலம் முடிந்து, மீனவா்கள் மீண்டும் மீன் பிடிக்கச் சென்று இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், இதுவரை 74 மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த அவலம் முடிவில்லாமல் தொடரக்கூடாது. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): இலங்கை கடற்படையினரின் தொடா் அத்துமீறல் கடும் கண்டனத்துக்குரியது. ஒவ்வொருமுறை மீனவா்கள் கைது செய்யப்படும்போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மீனவா் கைதுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com