மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மத்திய அரசு விருப்பு, வெறுப்பின்றி செயல்பட வேண்டும்: தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின்


மத்திய அரசு விருப்பு, வெறுப்பின்றி அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாகச் செயல்பட வேண்டும்; பாரபட்சம் காட்டக் கூடாது என்று தருமபுரியில் நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்' திட்டத் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஊரகப் பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்' திட்டத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று திட்டத்தைத் தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் அனைத்துப் பேரவைத் தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றேன். மேடையிலேயே மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டிருந்தது.
அந்த மனுக்கள் பெறப்பட்ட பெட்டிகள் அனைத்தும் திமுக தலைமை அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டன. ஆட்சிக்கு வந்த நூறு நாள்களுக்குள் அதில் செயல்படுத்த சாத்தியமான அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் காட்டுவேன் என்று சொன்னேன். அப்போது எதிர்க்கட்சிகள் அதைக் கேலி செய்தன.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் பொதுமக்களின் மனுக்களைக் கவனிப்பதற்கென்றே புதிதாக ஒரு துறை உருவாக்கப்பட்டது. மனுக்களைத் துறை வாரியாகப் பிரித்து, அதிலிருந்து நடைமுறைக்கு சாத்தியமுள்ள 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.
தேர்தலுக்கு முன்னால் பெறப்பட்ட மனுக்களுக்குத் தீர்வு கண்டவுடன், எங்களுடைய கடமை முடிந்துவிட்டது என்று நாங்கள் நினைக்கவில்லை. இனிமேல்தான் கடமை தொடங்குகிறது என்று நினைத்து உழைத்தோம். அதன் பின்னரும் தொடர்ந்து மனுக்களைப் பெற்றோம்.
முதல்வரின் தனிப் பிரிவு, முதல்வரின் உதவி மையம், "உங்கள் தொகுதியில் முதல்வர்' துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, "முதல்வரின் முகவரி' என்று புதிதாக ஒரு துறை உருவாக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கைகள் எந்த இடத்திலும் அரசின் பார்வையில் இருந்து தப்பிவிடக் கூடாது என்பதற்காகவே இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தோம்.
66.25 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு: முதல்வராக நான் பொறுப்பேற்ற நாள்முதல், "முதல்வரின் முகவரி' துறையின் கீழ் தற்போது வரை 68 லட்சத்து 30 ஆயிரத்து 281 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 66 லட்சத்து 25 ஆயிரத்து 304 மனுக்களுக்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 72,438 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முக்கியமாக 13 அரசுத் துறைகளைத்தான் அதிகமாக அணுகுகின்றனர். அதன்படி கிராமம், நகரங்களுக்கு நேரடியாகச் சென்று மனுக்களைப் பெற்று பதிவு செய்து, 30 நாள்களுக்குள் தீர்வு காணும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டதுதான் "மக்களுடன் முதல்வர்' என்ற திட்டம்.
இந்தத் திட்டம் நகர்ப்புறத்தில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே, இதை ஊரகப் பகுதியிலும் விரிவுபடுத்த வேண்டும் என்று முடிவு செய்து தற்போது தருமபுரியில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
பேருதவியான மகளிர் உரிமைத் தொகை: ஆட்சிப் பொறுப்பேற்ற நாள்முதல் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதன் பலனை மக்கள் எனக்கு எழுதும் கடிதங்கள் மூலமாகவும், நேரடியாக அவர்களைச் சந்தித்துப் பேசும்போதும் நான் அறிய முடிகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பூரணி என்பவர், தன்னுடைய வீட்டுவாசல் முன்பு கழிவுநீர் தேங்குவது தொடர்பாக எழுதிய மனுவுக்கு "மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ் தீர்வு காணப்பட்டது.
அதற்கு நன்றி தெரிவித்து அவர் எழுதிய மற்றொரு கடிதத்தில், இதய நோயாளியான அவருக்குத் தேவையான மருந்துகள் அரசு மருத்துவமனையிலேயே கிடைத்துவிடுவதாகவும், ஒரே ஒரு மாத்திரையை மட்டும் வெளியில் வாங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறியிருந்தார். அந்த மாத்திரையை வாங்க "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தில் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் உதவியாக இருப்பதாகவும் தனது கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.
எனவே, "மகளிர் உரிமைத் தொகை' திட்டம் பெண்களுக்குப் பேருதவியாக அமைந்துள்ளது. அரசின் நலத் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் ஏதாவது ஒரு பலன் கிடைத்து வருகிறது. அதேபோல "மக்களுடன் முதல்வர்' எனும் இத் திட்டத்தின் மூலமாக "யாருக்கும் எந்தக் குறையும் இல்லை' என்ற நிலையை உருவாக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
பாரபட்சமற்ற செயல்பாடு: வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள் என்ற எந்த வேறுபாடும் காணாமல் அனைத்து மக்களுக்குமான அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், இதே பெருந்தன்மையை மற்றவர்களிடம் காண முடியவில்லை. தேர்தல்களில் தமிழகத்தில் தொடர் தோல்வி, படுதோல்வி அடைந்த பிறகும் அதிலிருந்து மத்திய அரசு இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.
தமிழகத்துக்கு முக்கியக் கோரிக்கையாக இருக்கும் மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை; பாடம் கற்றுக்கொண்ட நினைப்பும் இல்லை. தங்களின் 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் எந்தவொரு பெரிய திட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது. விருப்பு, வெறுப்புகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாக செயல்பட வேண்டும். இதை இனியாவது மத்திய அரசு உணர வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...