
தமிழகத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை காலை விடுத்துள்ளது.
மேலும், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. கடந்த இரண்டு நாள்களாக நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பதிவாகியுள்ளது.
மேலும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு மிதமான மழை தொடரும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், சில மாவட்டங்களில் இன்று 12 முதல் 20 செ.மீ. வரை மிக கனமழை பதிவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதேபோல், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.