கோவை பீளமேடு அருகே தனியார் ஆம்னிபேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் இருந்து 30 பயணிகளுடன் குளிர்சாதன வசதி கொண்ட தனியார் ஆம்னி பேருந்து கோவை நோக்கி புறப்பட்டது.
இந்தப் பேருந்தை ஓட்டுநர் தாஸ் என்பவர் ஓட்டி வந்தார். கோவை சித்ரா அருகே இன்று காலை 6.00 மணி அளவில் வந்துகொண்டிருந்தபோது பேருந்தில் திடீரென புகை வருவதைக் கண்ட ஓட்டுநர் தாஸ் உடனடியாக சாலை ஓரமாக பேருந்தை நிறுத்தினார்.
அதில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறு கூறினார். தூங்கிக்கொண்டு இருந்த பயணிகள் பேருந்தில் தீ பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக பேருந்தை விட்டு 30 பயணிகளும் பத்திரமாக கீழே இறங்கி உயிர் தப்பினர். பின்னர் இது குறித்து பீளமேடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது.
இது குறித்து பீளமேடு காவல் துறையினர் டீசல் கசிவு அல்லது குளிர்சாதன பெட்டியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதா என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.