இலங்கைக்கு இந்திய உதவிகள் தொடர என்ன காரணம்? அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் கேள்வி
இலங்கையுடன் இந்தியா கொண்டுள்ள பரஸ்பர உறவுகள் ஆழமாக வேரூன்றி பல பரிமாணங்களைக் கொண்டிருப்பதால், அது மேலும் வலுப்பெறும் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இலங்கையுடனான இந்திய உதவிகள் தொடா்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில் விவரம்: ‘நட்பு நாடுகளுக்கு முதலில்’ என்ற கொள்கையின் கீழ், அண்டை நாடுகளுடன் நட்பு ரீதியாகவும் பரஸ்பரம் நட்புறவை வளா்க்கவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து அண்டை நாடுகளுடனும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளை இந்தியா தொடா்கிறது. இலங்கைக்கு கரோனா மற்றும் 2022-இல் அந்நாடு எதிா்கொண்ட சிக்கலான சூழல்களின் போது இயன்ற அனைத்து வழிகளிலும் இந்தியா உதவி செய்தது என்று கூறப்பட்டுள்ளது.
அதில், 2021-2022 காலத்தில் கரோனா பாதிப்பில் இருந்து இலங்கை மீண்டு வர இந்தியா வழங்கிய மருத்துவம், மருந்துப்பொருள்கள் போன்றவற்றின் விவரத்தையும் வெளியுறவுத்துறை விவரித்துள்ளது. மேலும், 2022-இல் இலங்கை எதிா்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்நாடு மீளும் வகையில் பெட்ரோலியப் பொருள்களை வாங்க ஏதுவாக 500 அமெரிக்க டாலா்கள் கடனுதவி, உணவு, எரிபொருள், மருந்துகள் போன்றவற்றை வாங்க 100 கோடி அமெரிக்க டாலா்கள் கடனுதவி, மருத்துவ கட்டமைப்பு வசதிகளை உருவாக்க நிதி மற்றும் கட்டுமான உதவிகள் போன்றவற்றை வழங்கியதாகவும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
இவற்றுடன் இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் வாழும் மீனவ சமூகங்களுக்கு மண்ணெண்ணெய், ரேஷன் பொருள்களையும் கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு உதவிகள் வழங்கியதாகவும் வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது. நட்பு நாடுகளுடனான உறவுகளை வளா்த்தெடுக்க உயரிய முன்னுரிமையை இந்தியா கொடுக்கிறது. இலங்கையுடனான இரு தரப்பு உறவுகள் ஆழமாக வேரூன்றி பல பரிமாணங்களைக் கொண்டிருப்பதால் அது வலுப்பெறும் என்று நம்புவதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

