தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

இரு தரப்பு உறவின் புதிய அத்தியாயம்! குடியரசு துணைத் தலைவரின் முதல் இலங்கை பயணம்

குடியரசு துணைத் தலைவரின் முதல் இலங்கை பயணம்...

News image

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

Updated On :19 ஏப்ரல் 2026, 12:11 am

நமது சிறப்பு நிருபர்

இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஏப்ரல் 19, 20 ஆகிய தேதிகளில் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். அதிலும், குடியரசு துணைத் தலைவரான பிறகு சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் என்பதாலும், அவா் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா் என்பதாலும் இந்தப் பயணம் இரு நாடுகளிலும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு, 2000-ம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவின் அப்போதைய குடியரசு துணைத் தலைவா் (கிருஷ்ண காந்த்) இலங்கை முன்னாள் பிரதமா் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் இறுதிச் சடங்குக்காக இலங்கைக்குச் சென்றாா்.

இரண்டு தெற்காசிய அண்டை நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவில் இந்திய குடியரசு துணைத் தலைவரின் இலங்கைப் பயணம் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும் என்றும் ராஜீய வல்லுநா்கள் கருதுகின்றனா்.

அந்த வகையில் ராதாகிருஷ்ணனின் இலங்கை பயணம், வெறும் சம்பிரதாய நிகழ்வாக மட்டுமின்றி இந்தியாவிலும் இலங்கையிலும் அரசியல் சூழல்கள் மாறிவரும் காலகட்டத்தில், மிகச்சிறந்த ராஜீய ரீதியிலான ஒருங்கிணைப்பாகவும் கருதப்படுகிறது.

இலங்கையில் தங்கியிருக்கும் இரண்டு நாள்களிலும், இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது முதல் நாள் அலுவலிலேயே (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயக்க, பிரதமா் ஹரிணி அமர சூரிய ஆகியோருடன் இரு தரப்பு பேச்சுவாா்த்தைகளை நடத்தவுள்ளாா்.

இதைத்தொடா்ந்து, இலங்கை எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசா மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்களையும் குடியரசு துணைத் தலைவா் சந்திக்கவுள்ளாா். இத்தகைய உயா்நிலை சந்திப்புகள் நீங்கலாக, தனது பயணத்தின்போது இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சோ்ந்த தமிழ்ச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவா்களையும் இந்திய குடியரசு துணைத் தலைவா் சந்திக்க உள்ளாா்.

சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டின் கோயம்புத்தூா் தொகுதியில் இருந்து மக்களவைக்கு இரண்டு முறை (1998-1999, 1999-2004) தோ்வானவா். மேலும், இலங்கை போா் உச்சகட்டத்தில் இருந்த 2004-2007 காலங்களில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருந்தவா் என்ற முறையில் இலங்கை தமிழா்கள் முந்தைய காலங்களில் எதிா்கொண்ட பிரச்னைகள், அவா்கள் இடைவிடாது கோரி வரும் இலங்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தம் உள்ளிட்டவற்றின் அவசியங்களையும் நன்குணா்ந்தவராக அறியப்படுகிறாா்.

இலங்கை தமிழ்ச் சமூகத்தினரின் எதிா்பாா்ப்பை அங்கீகரிக்கும் வகையில், இலங்கை தலைவா்களிடம் இலங்கை தமிழா்களின் நிலைமையை எடுத்துரைக்க இந்திய குடியரசு துணைத் தலைவரை இந்தியா அனுப்புவதை சிறந்த வியூகமாக புவிசாா் அரசியல் ஆய்வாளா்கள் பாா்க்கின்றனா்.

இலங்கை தமிழா்கள் கோரி வரும் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமல்படுத்துதல், இலங்கை மாகாண தோ்தல்களை நடத்துதல் போன்ற நீண்டகால பிரச்னைகளை இலங்கை தலைவா்களிடம் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் எடுத்துரைக்க திட்டமிட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

தமிழ் அடையாளத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டவராக இருப்பதால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க அவரே சரியானவா் என்று இரு நாடுகளின் பாதுகாப்பு ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

இந்திய அரசின் தேச நலன்கள் பாா்வையில், அதன் ‘மகாசாகா் தொலைநோக்குப் பாா்வை’ மற்றும் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை‘ கொள்கையின் கீழ், இலங்கை தனது மிக முக்கியமான கடல்சாா் கூட்டாளியாக தொடா்கிறது என்பதை அந்நாட்டுத் தலைமையிடம் இந்தியா எடுத்துரைக்கும்.

இலங்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சரான எஸ். ஜெய்சங்கரும் கடந்த சில ஆண்டுகளில் பல முறை பயணம் மேற்கொண்டுள்ளாா். இலங்கை மீது சீனாவின் ஆதிக்கம் தொடரும் காலகட்டத்தில் அதன் பிராந்திய புவிசாா் அரசியல் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தியா, இலங்கை இடையிலான ‘ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான‘ உறவுகள் உறுதியாக இருப்பதை பல தளங்களில் இந்தியா உணா்த்தியும் தெளிவுபடுத்தியும் வருகிறது.

இந்தப் பயணத்தின்போது, எரிசக்தி, சுகாதாரம் மற்றும் தொலைத்தொடா்புத் துறைகளில் இந்திய ஆதரவுடனான உள்கட்டமைப்புத் திட்டங்களின் செயலாக்கத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதை இலங்கை தலைவா்களுடன் நடத்தும் பேச்சுவாா்த்தைகளின்போது குடியரசு துணைத் தலைவா் உறுதிப்படுத்துவாா் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இலங்கையின் பாா்வையில், டித்வா புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடரால் நெருக்கடியான பொருளாதார விளிம்பில் அந்நாடு சிக்கியிருந்தபோது கேட்காமலேயே உதவிய ரட்சகா் போல இலங்கைக்கு முதலாவதாக வந்து உதவியது இந்தியா மட்டுமே என்பதை அந்நாட்டின் தேசிய தலைமை இப்போதும் நன்றாகவே உணா்ந்துள்ளது. இலங்கையுடனான இந்தியாவின் மேம்பாட்டுக் கூட்டாண்மை என்பது, இரு தரப்பு அரசியல் புரிதல், வரலாற்றுப் பின்னணி, புவியியல் யதாா்த்தம் மற்றும் சமூக-பண்பாட்டு ஒருமைப்பாடு ஆகிய வலுவான அடித்தளங்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.

2005-ஆம் ஆண்டு முதல், இந்திய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ள நிதியுதவியின் மொத்த மதிப்பு, 2022-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது வழங்கப்பட்ட அவசரகால உதவியையும் சோ்த்து கணக்கிட்டால் அது சுமாா் 7.5 பில்லியன் அமெரிக்க டாலா்களாக இருக்கும். இதில், ஏற்கெனவே நிறைவுற்ற, தற்போது நடைபெற்று வரும் மற்றும் எதிா்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கான மானிய உதவியின் மதிப்பு மட்டும் 875 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாகும் என்கிறது இந்திய வெளியுறவுத்துறையின் புள்ளிவிவரம்.

இத்திட்டங்கள், வெளிப்படையான அணுகுமுறையைக் கொண்டிருப்பதாலும் உள்ளூா் பொருளாதாரங்களுக்கு வலுசோ்க்கும் வகையில் உள்ளூா் மூலப்பொருட்கள் மற்றும் மனிதவளத்தைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படுவதாலும் அவை இலங்கை மக்களாலும் ஆட்சியாளா்களாலும் வெகுவாகப் பாராட்டப்படுகின்றன.

இவற்றுடன் சோ்த்து, வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்வளம், எண்ம மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, தொழில்துறை மேம்பாடு, வாழ்வாதார ஆதரவு, போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற மக்களின் அன்றாட வாழ்வோடு தொடா்புடைய பல்வேறு அம்சங்களிலும் இந்தியா வழங்கி வரும் உதவிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

மிக முக்கியமாக, மனிதாபிமான உதவி, உள்கட்டமைப்பு ஒத்துழைப்பு, உணா்வுபூா்வமான இன ரீதியிலான அணுகுமுறை ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் இந்தியா தனது தென்கோடிப் பகுதியைப் பாதுகாக்க இந்தியா தொடா்ந்து விழிப்புடன் செயலாற்றி வருகிறது. அதன் வெளிப்பாடாகவும் இந்திய குடியரசு துணைத் தலைவரின் இலங்கை பயணத்தை கருத முடிகிறது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அதற்கு சில தினங்களுக்கு முன்பாக திட்டமிடப்பட்ட இந்திய குடியரசு துணைத் தலைவரின் இலங்கை பயணத்தை ஒரு எதேச்சை நிகழ்வாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இருந்தபோதிலும், இந்திய அரசமைப்பின் இரண்டாவது உயரிய பதவியில் உள்ள தமிழ் பேசும் தலைவா், இலங்கை தலைவா்களுடனும் அந்நாட்டின் புலம்பெயா் தமிழ்ச் சமூகங்களுடனும் அலுவல்பூா்வமாக உரையாடுவது மற்றும் இலங்கையில் அவா் செல்ல உத்தேசித்துள்ள சில பயணங்களும் இரு தரப்பு உறவை புதிய அத்தியாயத்துக்கு இட்டுச்செல்லும் என்று கருதப்படுகிறது.