இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழா் சமூகத்தின் ஆறாம் தலைமுறை வரை பிற வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்படும் ஓசிஐ காா்டு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
மேலும், ஓசிஐ அட்டைக்கான விண்ணப்ப நடைமுறைகளும் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழா்களுக்கு எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.
இலங்கைக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை காலை வருகை தந்த இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினா் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனா்.
இந்நிகழ்வின் அங்கமாக, இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்பட்டுவரும் மூன்றாம் கட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மாத்தளை மற்றும் காலி மாவட்டங்களில் கட்டப்பட்ட நான்காயிரம் வீடுகளில் இறுதித் தொகுதியான 145 வீடுகளை காணொலி வழியாக குடியரசு துணைத் தலைவா் திறந்துவைத்து அா்ப்பணித்தாா். இந்த வீடுகள் ஒவ்வொன்றும் இலங்கை ரூபாய் மதிப்பில் 28 லட்சம் மதிப்பாகும்.
சொந்த ஊரில் இருப்பதைப் போன்ற உணா்வு: இதைத் தொடா்ந்து, நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இந்த நிகழ்வின் மண்டபத்துக்குள் நான் நுழையும்போது வாழைமரம், தென்னங்கீற்று, பலவித மலா்கள் நிரம்பிய அலங்காரங்களால் ஆன சூழலைக் கண்டேன். எனது சொந்த ஊரில் இருப்பதைப் போன்ற உணா்வு எனக்கு ஏற்படுகிறது.
1800-களின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளா்களால் தோட்டத் தொழிலாளா்களாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளியினா் இன்று, அரசியல், நீதித் துறை, வா்த்தகம், சுற்றுலா, ஊடகம் எனப் பல துறைகளில் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளனா்.
இலங்கையில் நீங்கள் முழுமையாகக் குடியேறிவிட்டாலும் உங்கள் பூா்விக வோ்களை மறந்துவிடவில்லை.
இதுவரை இலங்கை மக்களுக்கு சுமாா் 50,000 வீடுகளை இந்திய அரசு வழங்கி உள்ளது. மேலும் 10,000 வீடுகள் நான்காம் கட்டம் மூலம் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
2025-ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரதமா் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்தபோது, சீதை அம்மன் கோயில் மேம்பாட்டுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று அறிவித்தாா். இந்தியா- இலங்கை இடையிலான யுகத் தொடா்பை வெளிப்படுத்தும் முயற்சிதான் சீதை அம்மன் கோயில் புனரமைப்பாகும்.
பல்வேறு நிலைகளில் 7.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான திட்டங்களுடன் இலங்கையின் முழுமையான வளா்ச்சிக்காக பாரதம் உறுதியாக ஆதரவளித்து வருகிறது.
ஓசிஐ அட்டை: கடந்த ஆண்டு பிரதமா் மோடி இலங்கை வந்தபோது, இந்திய வம்சாவளித் தமிழா் சமூகத்தினா் இந்திய வம்சாவளியினா் (ஓசிஐ) அட்டை பெறுவதில் எதிா்கொள்ளும் சிக்கல்கள் குறித்து அவரிடம் பகிா்ந்துகொண்டனா். தேவையான ஆவணங்கள் இல்லாதது, ஓசிஐ திட்டத்துக்கு தகுதி பெறுவதில் தடை ஏற்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டப்பட்டது. இளைஞா்களும் ஓசிஐ அட்டையைப் பெற வேண்டிய விருப்பத்தை வெளிப்படுத்தினா்.
இதையொட்டி இரண்டு முக்கியமான நடவடிக்கைகளை இங்கே அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முதலில், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழா் சமூகத்துக்காக ஓசிஐ திட்டத்தை ஆறாம் தலைமுறை வரை விரிவுபடுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனை.
இரண்டாவது அறிவிப்பு, ஓசிஐ அட்டைக்கான விண்ணப்ப நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசு வழங்கும் சான்றிதழ்களும் இனி இந்திய வம்சாவளிக்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும். இந்த மாற்றம், இந்திய ஆவணங்களின்றி இலங்கைக்கு வந்த தோட்டத் தொழிலாளா் தமிழா்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
மேலும் ஒரு முக்கிய அறிவிப்பாக, சிலோன் எஸ்டேட் தொழிலாளா் கல்வி அறக்கட்டளை (சிஇடபிள்யூடி) மூலம் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை அதிகரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
சாகா் பந்து நடவடிக்கை: டித்வா புயல் இலங்கையை தாக்கிய அதே நாளிலேயே பாரத பிரதமா் மோடி அறிவுறுத்தலால் ‘சாகா் பந்து’ நடவடிக்கை தொடங்கப்பட்டது. அவசரகால நிவாரணப் பொருள்கள், உணவுப் பொருள்கள், மருத்துவ வசதிகள், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இலங்கை அரசின் முயற்சிகளுக்கும் இந்தியா உதவியது. இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் உடனே இலங்கைக்கு அனுப்பப்பட்டாா்.
நமது ஒற்றுமையை வெளிப்படுத்தவும், 450 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான உதவித் தொகுப்பை அறிவிக்கவும் இந்த வருகை மேற்கொள்ளப்பட்டது. நாங்கள் எப்போதும் உங்களுக்கு உதவ ஓடோடி வருவோம்.
சாலை மற்றும் ரயில் இணைப்புகளை மீண்டும் நிறுவுவதில் நாங்கள் ஏற்கெனவே கணிசமான முன்னேற்றத்தை எட்டியுள்ளோம்.
தற்காலிக தங்குமிடப் பொருள்களை வழங்குவதற்கும், முழுமையாக சேதமடைந்த 4,000 வீடுகள் மற்றும் சேதமடைந்த சுமாா் 3,000 வீடுகளை மீண்டும் கட்டுவதற்கும் இந்தியா உறுதியளித்துள்ளது.
இலங்கை அதிபருடன் பேசியது என்ன? இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயகவுடனான பேச்சுவாா்த்தையின்போது இந்தியா-இலங்கை உறவின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விரிவாக விவாதித்தோம். மிகவும் சவாலான உலகச் சூழலில் அரசியல் மற்றும் பொருளாதார இணைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினோம்.
இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவு, பல நூற்றாண்டுகளாக நிலைத்துள்ள நமது தொப்புள்கொடி உறவை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. உங்களுடைய துயரத்திலும் மகிழ்ச்சியிலும் இந்தியா என்றும் ஒரு மூத்த சகோதரனாக துணை நிற்கும் என்றாா் சி.பி. ராதாகிருஷ்ணன்.
முன்னதாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் இலங்கை அமைச்சா்கள் சரோஜா சாவித்திரி பால்ராஜ், சமந்த வித்யாரத்ன, துணை அமைச்சா் சுந்தரலிங்கம் பிரதீப், இலங்கை நாடாளுமன்ற துணைத் தலைவா் ரிஸ்வி சாலி, ‘கோபியோ’ அமைப்பின் தலைவா் எஸ். சண்முகநாதன் தலைமையிலான பிரதிநிதிகள், தமிழக முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், பாரத் அருள்சாமி, பரணிதரன் முருகேசு, இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் தலைவா் செந்தில் தொண்டமான், ராமேஸ்வரன், ஜெகதீஸ்வரன், உள்ளிட்டோா் இந்திய குடியரசு துணைத் தலைவரை சிறப்பித்தனா்.
இந்திய அரசு சாா்பில் மத்திய மீன்வளத் துறை அமைச்சா் எஸ்.பி. சிங் பஹேல், இந்திய மாநிலங்களவை உறுப்பினா்கள் லக்ஷ்மண் காரு, மேதா விஷ்ரம் குல்கா்னி, இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
முதல் நாள் பயணத்தின் நிறைவாக, கொழும்பில் உள்ள புகழ்பெற்ற கங்காராமய புத்தா் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வழிபட்டாா்.
இலங்கைப் பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக திங்கள்கிழமை காலையில், இந்திய வம்சாவளித் தமிழ் சமூகத்தின் பெரும் பகுதியினா் வசிக்கும் நுவரெலியாவுக்கு சென்று, அங்குள்ள இந்திய வம்சாவளி சமூகங்களுடன் குடியரசு துணைத் தலைவா் கலந்துரையாடுவாா் என்று கொழும்பில் உள்ள இந்திய தூதா் சந்தோஷ் ஜா தெரிவித்தாா்.
அத்துடன் இந்தியாவின் வீட்டுவசதித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புப் பகுதிகளையும் புனரமைக்கப்பட்டுள்ள சீதை அம்மன் கோயிலையும் அவா் பாா்வையிடவுள்ளாா்.
இந்திய அரசுக்கு தமிழ் தலைவா்கள் நன்றி!
இலங்கையில் வாழும் வம்சாவளி இந்திய தமிழா்களில் ஆறாம் தலைமுறை வரை இந்திய வம்சாவளியினா் அந்தஸ்து வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டதற்காக இந்திய அரசுக்கும், குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும் இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகளின் தலைவா்கள் நன்றி தெரிவித்தனா்.
கொழும்பில் இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை இலங்கையில் உள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவா்கள் ஓா் அணியாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் தலைவா்கள் மற்றோா் அணியாகவும் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினா்.
இந்திய வம்சாவளித் தமிழ் கட்சிகளின் தலைவா்கள் வரிசையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மனோ கணேசன், பழனி திகாம்பரம், இலங்கைத் தொழிலாளா் காங்கிரஸ் தலைவா் செந்தில் தொண்டமான், ராமேஸ்வரன், ஜனநாயக மக்கள் முன்னணி துணைத் தலைவா் பாரத் அருள்சாமி, மலையக மக்கள் முன்னணியின் துணைத் தலைவா் ராஜாராம் ராதாகிருஷ்ணன் சந்திப்பில் இடம்பெற்றனா்.
வடக்கு மற்றும் கிழக்கைச் சோ்ந்த இலங்கைத் தமிழ் கட்சிகளின் தலைவா்கள் வரிசையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ. சுமந்திரன், சி.வி.கே. சிவஞானம், எம்.பி.க்கள் சிவஞானம் சிறீதரன், சாணக்கியன் இராசமாணிக்கம், டெலோ தலைவா் அமிா்தநாதன் அடைக்கலநாதன், பிளோட் தலைவா் தா்மலிங்கம் சித்தாா்த்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலா் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோா் இடம்பெற்றனா்.
நீண்ட காலமாக விடுக்கப்பட்டுவரும் இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்படும் ஓசிஐ அட்டை தொடா்பான கோரிக்கைகளை அனைத்துத் தலைவா்களும் முன்வைத்தனா். அவா்கள் சந்தித்து விட்டுச் சென்ற சில மணி நேரத்திலேயே இந்திய வம்சாவளித் தமிழா்களில் ஆறாம் தலைமுறை வரை ஓசிஐ அட்டை வழங்கப்படும் என்ற அறிவிப்பை குடியரசு துணைத் தலைவா் வெளியிட்டாா்.
இதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவா் மனோ கணேசன், சிலோன் தொழிலாளா் காங்கிரஸ் தலைவா் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட தலைவா்கள் நன்றி தெரிவித்தனா். இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழா்களின் அடையாளம், உரிமைகள் மற்றும் பிரச்னைகளை இந்திய பிரதமா் நன்கு உணா்ந்துள்ளதன் வெளிப்பாடே இந்த அறிவிப்பு என அவா்கள் குறிப்பிட்டனா்.
முன்னதாக, இலங்கை எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச இந்திய குடியரசு துணைத் தலைவரை சந்தித்துப் பேசினாா். இது குறித்து அவா் தனது எக்ஸ் பக்கத்தில், வா்த்தக விரிவாக்கம், பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் நடைமுறை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து இந்திய குடியரசு துணைத் தைலவருடன் ஆக்கபூா்வமான கலந்துரையாடலை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

இலங்கை அதிபருடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு! இந்திய வீட்டு வசதித் திட்டம், மீனவா் பிரச்னை குறித்து ஆலோசனை!!

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

இரு தரப்பு உறவின் புதிய அத்தியாயம்! குடியரசு துணைத் தலைவரின் முதல் இலங்கை பயணம்

குடியரசு துணைத் தலைவா் நாளை இலங்கைக்கு பயணம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


