பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை அரசுமுறைப் பயணத்தைப் போலவே, இந்த ஆண்டு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைக்கான அரசுமுறைப் பயணத்தின்போதும் கொழும்பில் இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அவரது விஜயத்துக்கு முன்பாகவே நான் கொழும்பு சென்று விட்டிருந்ததால், அரசுத் தரப்பிலும், பொது மக்கள் மத்தியிலும் அந்த அரசுமுறைப் பயணம் ஏற்படுத்தி இருந்த எதிர்பார்ப்பை என்னால் உணர முடிந்தது.
குடியரசு துணைத் தலைவரைச் சந்திக்க என்னுடன் 'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜும், 'தமிழன்' நாளிதழின் ஆசிரியர் சிவராஜா என்கிற சிவா ராமசாமியும் வந்திருந்தனர். அப்போது 'கம்பவாரிதி' சொன்ன வார்த்தைகள் உணர்வு பூர்வமானவை- 'இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் லங்கை வருகிறார் என்பதே மகிழ்ச்சி. அதைவிட இரட்டிப்பு மகிழ்ச்சி என்ன தெரியுமா? இலங்கைத் தமிழர்களின் பிரச்னை
களைப் புரிந்து கொள்ளக்கூடிய தமிழர் ஒருவர், இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராக இங்கே வந்திருப்பது.'
கம்பவாரிதியை சந்தித்ததில் குடியரசு துணைத் தலைவர் மேதகு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக அரசியல் சாராத விஷயங்கள் குறித்தும், தமிழ் குறித்தும், தமிழிலக்கியம் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம்.
இலங்கைவாழ் வம்சாவளித் தமிழர்களுக்கு 'இரட்டைக் குடியுரிமை' என்று அவர் பிரஸ்தாபித்திருப்பதில் அங்கிருக்கும் தமிழர்கள் அடைந்திருக்கும் உற்சாகத்தை வார்த்தையில் வடிக்க முடியாது. 'நாடற்றவர்கள்' என்கிற களங்கம் துடைத்தெறியப்படுவதுடன், எங்களைப் பாதுகாக்கும் கடமையை இந்தியா ஏற்றுக்கொள்கிறது என்கிற துணிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது அவரது அறிவிப்பு என்று சிவராஜா நெகிழ்ந்தார்.
குடியரசு துணைத் தலைவர் இந்தியா திரும்பிய பிறகு, இலங்கைக்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜாவை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். நுவரேலியாவுக்குச் சென்றிருந்தபோது அங்கே பெருந்திரளாக வம்சாவளித் தமிழர்கள் குடியரசு துணைத் தலைவரை வரவேற்க சாலையின் இருமருங்கிலும் கூடியிருந்தது குறித்து வியப்புடன் விவரித்தார். சாமானியர்களிடம் அவர் பழகிய விதமும், அவர்களது பிரச்னைகளை அணுகிய பாங்கும் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகச் சொன்னபோது, உண்மையாகவே பெருமையாக இருந்தது.
குடியரசு துணைத் தலைவருக்குத் தந்த, அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் இந்த ஆண்டுக்கான கம்பன் விழா அழைப்பிதழை என்னிடமும் பகிர்ந்து கொண்டார் 'கம்பவாரிதி'. ஏப்ரல் 30, மே 1, 2, 3-ஆம் தேதிகளில் கொழும்பில் நடக்க இருக்கும் கம்பன் விழாவில் தமிழகத்தின் முன்னணி இலக்கிய உரையாளர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
நான் சற்றும் எதிர்பாராத செய்தி என்னவென்றால், இந்த ஆண்டுக்கான 'கம்பன் புகழ்' விருது, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகவுக்கு வழங்கப்படுகிறது என்பதுதான். அமரர் வி.ரி.வி. தெய்வநாயகம் பிள்ளை நினைவு அறக்கட்டளையால் வழங்கப்படும் அந்தவிருதுக்கு சிங்களவரான இலங்கை அதிபரைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை விளக்கினார் 'கம்பவாரிதி'.
'அதிபர் அநுர குமாரவுக்கு 'கம்பன் புகழ்' விருது வழங்குவதை சிலர் விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் பகைமை பாராட்டுவது இராமபிரானுக்கும், கம்ப நாட்டாழ்வாருக்கும் உவப்பான, ஏற்புடைய பண்பல்ல என்பதுதான். நமது நிகழ்வில் வெறுப்புப் பாராட்டாமல் நமது அதிபர் கலந்து கொள்ளும்போது, அவரை வரவேற்று மரியாதை செய்வதுதான் தமிழர்களின் பண்பாக இருக்க முடியும்' என்பது கம்பவாரிதியின் விளக்கம்.
'யாரொடும் பகையிலன் எனும்போது போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது' என்கிற கம்பனின் வரிகள் நினைவுக்கு வருகிறது.
கொழும்பில் 'தமிழன்' நாளிதழ் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே ஆசிரியர் சிவராஜாவின் அறையில் இருந்த புத்தக அலமாரியில் '1000 கவிஞர்கள் கவிதைகள்' என்கிற புத்தகத் தொகுப்பு இருந்தது. 1,861 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கிய எனக்கு ஏற்பட்ட வியப்பை விவரிக்கத் தெரியவில்லை.
'படைப்பின் சாரம் மனிதன்; மனிதனின் சாரம் மொழி; மொழியின் சாரம் கவிதை; கவிதையில்தான் ஒரு மொழியினத்தின் பண்பாட்டு ஆவணம் இருக்கிறது' என்கிற 'கவிக்கோ'
அப்துல் ரகுமானின் முன்னுரைப் பகுதியுடன் தொகுக்கப்பட்டிருக்கிறது அந்தக் கவிதைகளின் தொகுப்பு.
32 நாடுகளைச் சேர்ந்த 1,098 கவிஞர்களின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறார்கள். அதில் இந்திய மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளில் இருந்தும் கவிஞர்களின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் குறித்த சிறு குறிப்புடன் தொகுக்கப்பட்டிருக்கிறது.
'சங்கப் பாடல்கள் தொகுக்கப்படாது இருந்தால், நாம் இங்கு தமிழ் மக்களின் தொன்மைச் சிறப்பை, பண்பாட்டைக் கண்டிருக்க முடியாது; தேவார, திருவாசகமும், பிரபந்தங்களும் தொகுக்கப்பட்டிருந்ததால் பக்தியின் மொழி தமிழ் என்கிற மதிப்பைப் பெற முடிந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை ஒரே இடத்தில் தரிசிக்க வைக்கும் முயற்சி லேசான காரியம் அல்ல' என்கிற யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த் துறை தலைவர் பேராசிரியர் சிவலிங்கராஜாவின் கூற்று உண்மையிலும் உண்மை.
முல்லைத் தீவு, விசுவமடு, வள்ளுவர்புரத்தில் இருந்தபடி, இந்த செயற்கரிய சாதனையைச் செய்திருக்கிறவர் கவிஞர் யோ.புரட்சி. அவருக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கி இந்தத் தொகுப்பு வெளிவரக் காரணமாக இருந்தவர் கனடாவைச் சேர்ந்த யமுனா நித்தியானந்தன். 'தமிழர்கள் வாழும் இடமெல்லாம் இந்த நூல் சென்றடைய வேண்டும். இதைத் தமிழ்ச் சொத்தாக்குவோம்' என்று அவர் சொல்லும்போது, அவரது தமிழ்ப் பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது.
வா க்குப்பதிவு நாளான ஏப்.23-ஆம் தேதி காலை ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரம கல்யாணி கல்லூரியில்எனது வகுப்புத் தோழரும் ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியருமான கடையம் சோமசுந்தரம் அனுப்பித் தந்திருந்த அவரது நண்பர் எம்.ஆர்.டி. சீனிவாசனின் குறுங்கவிதை இது. புரிந்தவர்களுக்குப் புரியும்.
நேற்றிரவு
குறுநேர மின்தடை
பிறகு சீரானது
'விநியோகம்'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழா்களுக்கும் ஓசிஐ அட்டை: கொழும்பில் இந்திய குடியரசு துணைத் தலைவா் அறிவிப்பு!

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

இரு தரப்பு உறவின் புதிய அத்தியாயம்! குடியரசு துணைத் தலைவரின் முதல் இலங்கை பயணம்

குடியரசு துணைத் தலைவா் நாளை இலங்கைக்கு பயணம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


