காவிரி வெள்ளம்: மரத்தில் சிக்கியுள்ள உடலை மீட்பதில் காவல் துறை மெத்தனம்!
காவிரி ஆற்றங்கரையோரத்தில் நீர்வரத்து அதிகரிப்பின்போது கர்நாடக இளைஞர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.


கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட போது ஆற்றில் அடித்து வரப்பட்ட இளைஞரின் உடலை மீட்டு தரக் கோரி தமிழக காவல் துறையிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியத்துடன் செயல்படுவதாக கர்நாடக தம்பதி புகார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பியுள்ளன.
இரு அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.50 லட்சம் வரை கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. காவிரி ஆற்றில் அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கர்நாடகம் மற்றும் தமிழக கரையோரப் பகுதிகளில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
கர்நாடக பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் உள்ள முத்தத்தில் ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் நீர்வரத்து அதிகரிப்பின் போது இளைஞர் ஒருவர் அடித்து செல்லப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஒகேனக்கல் பகுதியில் உள்ள உறவினர் கொடுத்த தகவலின் பெயரில் கர்நாடக தம்பதி நாகராஜ், கவுரம்மாள் ஆகியோர் அடித்துச் செல்லப்பட்டவரை அடையாளம் கண்டுள்ளனர்.
ஆற்றில் அடித்து வரப்பட்ட நபர் உன்சன அள்ளி பகுதியைச் சேர்ந்த சிக்கன்னா சாரி மகன் சித்தப்பா ஜி (30) - தச்சு வேலை செய்பவர் என தமிழக காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளனர்.
அப்போது காவல்துறையினர் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் அடித்து வரப்பட்ட உடலை எடுக்க முடியாத சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் வீடு திரும்பிய கர்நாடக தம்பதி, காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருவதை அறிந்து கடந்த நான்கு நாட்களாக தமிழக பகுதியான ஒகேனக்கல்லுக்கு வந்து காவல் நிலையத்தில் மீண்டும் முறையிட்டுள்ளனர்.
ஆனால் தமிழக காவல் துறையினர் ஆற்றில் அடித்து வரப்பட்ட உடல் மிகவும் சிதிலம் அடைந்துள்ளதால், தனது உயர் அதிகாரிகளுக்கு தெரிந்த பின்னரே தீயணைப்பு துறையினரின் உதவியுடன் எடுப்பதாக தெரிவித்து வந்துள்ளனர்.
உடலை மீட்டுத்தரக் கோரும் கர்நாடக தம்பதி
இது குறித்து கர்நாடக தம்பதி கூறுகையில்: காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருவதை அறிந்து கடந்த நான்கு நாள்களாக ஒகேனக்கல் அத்தி மரத்துக்கடவு பகுதியில் உள்ள மரத்தில் சிக்கியுள்ள உடலை மீட்டுத் தரக் கோரி ஒகேனக்கல் காவல் நிலையத்தில் நேரடியாக சென்று முறையிட்டு வருகிறோம்.
ஆனால், காவல் துறையினர் முறையாக பதில் அளிக்காமல் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாகவும் அவர்கள் கொடுக்கும் உத்தரவின் பெயரில் நீர் வரத்து மேலும் குறைந்த பின்னர் உடலை எடுக்க முயற்சிப்பதாகவும் அலட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருகிறது. மீண்டும் நாளை காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் மரத்தில் சிக்கியுள்ள உடல் அதிக நீர் வரும்போது அடித்துச் செல்லப்படும் நிலை உள்ளது. எனவே, தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆற்றில் அடித்து வரப்பட்ட கர்நாடக இளைஞரின் உடலை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக தம்பதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...