
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் முதல்வா் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும் என்றும், இது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துளள்து.
முதல்வா் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்ததை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்ததை எதிர்த்து சட்டப்பேரவை செயலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி. குமரப்பன் ஆகியோா் விசாரித்து தீர்ப்பளித்துள்ளனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டு அப்போதைய எதிா்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக எம்.எல்.ஏ-க்கள் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு சென்றனா்.
தடை செய்யப்பட்ட பொருளை பேரவைக்குள் கொண்டுசென்றதையடுத்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக பேரவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவா் தனபால் உத்தரவிட்டாா். அதன்படி அப்போதைய பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் உரிமைக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிா்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, அந்த நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
அதிமுக ஆட்சிக் காலத்திலேயே இந்த உத்தரவை எதிா்த்து பேரவைச் செயலா் மேல்முறையீடு செய்தாா். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் , சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக திமுக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், முந்தைய ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை, புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும் கைவிடுவதை ஏற்க முடியாது. அதை அனுமதித்தால், இந்த நடவடிக்கை பிறருக்கு முன்மாதிரியாக ஆகிவிடும் என்று கருத்து தெரிவித்திருந்தனா்.
விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்வதாகவும், நோட்டீஸ் செல்லும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.