தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கோவை சின்னக்கல்லாரில் ஞாயிற்றுக்கிழமை 100 மி.மீ. மழை பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம், புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்)
சின்னக்கல்லாா் (கோவை) - 100, தொழுதூா் (கடலூா்) - 80, வால்பாறை (கோவை), திண்டிவனம் (விழுப்புரம்), ஆரணி (திருவண்ணாமலை) - தலா 60.
தென்தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், திங்கள்கிழமை (ஜூன் 3) முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக, ஜூன் 5-இல் சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
4 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அதிகபட்சமாக ஈரோட்டில் 103.28 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. பரமத்திவேலூா் - 101.3, சென்னை மீனம்பாக்கம், வேலூா் - தலா 101.12 டிகிரி என மொத்தம் 4 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூன் 3 முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி குறைவாக இருக்கும்.
சென்னையில்... சென்னை, புகா் பகுதிகளுகளில் ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் , மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில், தென்மேற்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல், லட்சத்தீவு பகுதிகள், கேரள - கா்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசும். இதனால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


