
கோவை: கோவை மாவட்டம் மருதமலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த தாய் யானையை, அதன் குட்டி யானை தேடி வந்து பார்த்துச் சென்றது வனத்துறையினருக்கு ஆச்சரியத்தை அளித்தது.
கோவை மாவட்டம் மருதமலையில், உடல்நலம் குன்றி சிகிச்சைபெற்று வரும் தாய் யானையின் குட்டி, பெரிய யானைக் கூட்டத்துடன் சென்றுவிட்ட நிலையில், அதனை வனத்துறை தேடி வந்தனர். ஆனால், யாருமே எதிர்பாராத வகையில், இரவு 10.30 மணிக்கு குட்டி யானையே, தனது தாயின் இருப்பிடத்தை மிகச் சரியாகக் கண்டுபிடித்து தேடி வந்தது.
இது அங்கிருந்த வனத்துறையினருக்கு பெரிய ஆச்சரியத்தை அளித்தது. தனது தாயை பார்த்து அதன் நிலையை தெரிந்துகொண்டு சிறிது நேரம் தாயுடன் கொஞ்சி மகிழ்ந்துவிட்ட, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
தனது தாய்யானையுடன் சுமார் இரண்டு மணி நேரம் இருந்து, அதனை தொட்டுப்பார்த்து, அதன் இருப்பை உறுதி செய்துகொண்ட பிறகு, அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் வனத்துக்குள் சென்றது. அங்கு அந்த குட்டி மற்றும் தாய் யானையுடன் இருந்த பெரிய ஆண் யானைகள் மூன்றும், இரண்டு பெண் யானைகளும் ஒரு குட்டி யானை என பெரிய யானைக் கூட்டம், அந்த குட்டி யானைக்காக காத்திருந்து, தாயைப் பார்த்துவிட்டு வந்த குட்டியை அரவணைத்துக்கொண்டு காட்டுக்குள் சென்றது.
அந்த குட்டி யானையை கண்காணிக்க நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வியாழக்கிழமை முதல் இரண்டு கால்நடை மருத்துவர்கள் உள்பட வனத்துறையினர் அடங்கிய குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் யானை, கிரேன் மூலம் நிறுத்திவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதில், அது ஓரளவுக்கு உடல்நிலை தேறியது. தாமாக உணவு சாப்பிடவும் தொடங்கியது.
மாம்பழம், ராகி, சாதம் உருண்டைகளில் மருத்துவர்கள் யானைக்கு அளிக்கப்பட வேண்டிய மருந்துகளை வைத்து உண்ணக் கொடுத்து வந்தார்கள். அதனுடன், அஷ்டசூரணம் பொடியும் உணவில் கலந்து கொடுக்கப்பட்டது. அது யானையின் ஜீரண மண்டலத்தை சரிப்படுத்த உதவும் என்று மருத்துவர்கள் கூறினர்.
அதுபோல, சிகிச்சை பெறும் தாய் யானையை விட்டு குட்டி யானை பிரிந்து யானைக் கூட்டத்துடன் சென்றதும் நல்ல விஷயமாகவே கருதப்படுகிறது. இல்லையென்றால், தாய் யானையிடம் குட்டியானை தாய்ப்பால் குடிப்பதால், அதன் உடல்நிலை வேகமாக முன்னேற்றம் அடைவது பாதிக்கப்படலாம் என்று கருதப்படுவதாகக் கூறப்படுகிறது.
தாய் யானையின் உடல்நிலை நன்கு சீரடைந்து உடல்நலம் தேறியதால், அது இன்று காலை காட்டுக்குள் விடப்பட்டது. யானையால் நிற்க முடிவதாலும், தானே உணவை சாப்பிடுவதாலும் அதனை காட்டுக்குள் அனுப்பினால், அது உடல்நிலை தேறிவிடும் என்று மருத்துவர்கள் கூறியதால், அது வனத்துக்குள் அனுப்பிவைக்கப்பட்டது.
வனத்துக்குள் விடுவதற்கு முன்பு, வனப்பகுதியில் பொதுவாக யானைகள் சாப்பிடும் மரத்தழைகள், புற்கள் போன்றவை வழங்கப்பட்டு, அது எளிதில் அதனை சாப்பிட்டு நல்லமுறையில் இருக்கிறதா என்பதையும் மருத்துவர்கள் சோதித்துக்கொண்டனர். இன்னும் ஒரு சில நாள்களுக்கு அந்த யானை வனத்துறையின் கண்காணிப்பிலேயே இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.