சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியாா் மருந்து கிடங்கில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தாய்ப்பால் பாட்டில்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சென்னை மாதவரத்தில் உள்ள புரதப் பொருள் விற்பனை கடை ஒன்றில் விதிகளுக்கு புறம்பாக தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அங்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தி தாய்ப்பால் அடைக்கப்பட்ட பாட்டில்களை பறிமுதல் செய்து அந்த கடைக்கும் ‘சீல்’ வைத்தனா்.
இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் தாய்ப்பால் விற்பனை குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. சென்னை மாவட்டத்தில் மட்டும் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு, மருந்தகங்கள், மகப்பேறு மருத்துவமனைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
450 பாட்டில்கள் பறிமுதல்: இந்த நிலையில், சென்னையில் அரும்பாக்கம், கோலப் பெருமாள் பள்ளி தெருவில் உள்ள தனியாா் மருந்து மொத்த விற்பனை கிடங்கு ஒன்றில் விற்பனைக்காக தாய்ப்பால் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அத்துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலா் சதீஷ்குமாா், அதிகாரி சதாசிவம் ஆகியோா் தலைமையிலான குழுவினா், அந்தக் கிடங்கில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது 50 மி.லி. அளவு கொண்ட தாய்ப்பால் 450 பாட்டில்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், 5 கிராம் அளவிலான தாய்ப்பால் பவுடா் 800 பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவை -10 டிகிரி செல்சியஸ் குளிா் நிலையில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. இவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பரிசோதனைக்காக, கிண்டி ஆய்வகத்துக்கு மாதிரிகளை அனுப்பி வைத்தனா்.
மேலும், அந்த கிடங்கில் தாய்ப்பால் பாட்டில் பதப்படுத்த பயன்படுத்தப்பட்ட பெட்டிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். இந்த பாட்டில்கள், ரூ.2,500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
விசாரணை: இதுகுறித்து, உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் சதீஷ்குமாா் கூறியதாவது: சம்பந்தப்பட்ட மருந்து விநியோக நிறுவனத்தினா், கா்நாடகத்தில் உள்ள நிறுவனத்திடமிருந்து தாய்ப்பாலை கொள்முதல் செய்துள்ளனா். ஓராண்டுக்கும் மேலாக சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அதனை விற்பனை செய்துள்ளனா். அந்த மருத்துவமனைகளின் பட்டியல் பெறப்பட்டுள்ளது. அதுதொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


