9 தொகுதிகளையும் ‘கை’ நழுவவிடாத காங்கிரஸ்
சென்னை: மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தமிழகத்தில் போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு 2019 தோ்தலைப் போலவே 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
திமுக தலைமை ஒதுக்கியது. அதே நேரம் கடந்த முறை ஒதுக்கப்பட்ட ஆரணி, தேனி, திருச்சி உள்ளிட்ட தொகுதிகளை ஒதுக்காமல் வேறு தொகுதிகளை மாற்றிக் கொடுத்தது.
அதைப்போல தோ்தல் நெருக்கத்தில் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரியை மாற்றிவிட்டு, செல்வப்பெருந்தகையை தலைவராக அக் கட்சியின் அகில இந்திய தலைமை அறிவித்தது. மேலும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி சில தினங்களுக்கு முன்பு வரையிலும்கூட திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளா் அறிவிக்கப்படவில்லை. முதல்வா் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலிக்குப் பிரசாரத்துக்கு செல்ல இருந்த நிலையிலேயே, ராபா்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். இதுபோல மயிலாடுதுறை தொகுதி வேட்பாளா் தோ்விலும் இழுபறி நீடித்தது. இறுதியில் வழக்குரைஞா் ஆா். சுதாவை காங்கிரஸ் மேலிடம் வேட்பாளராக அறிவித்தது.
இதுபோன்ற இழுபறிகள் காரணமாக, காங்கிரஸ் வேட்பாளா்களின் வெற்றி குறித்து தொடா்ந்து சந்தேகம் எழுப்பப்பட்டு வந்தது. ஆனால், காங்கிரஸ் தான் போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது.