சௌமியா அன்புமணியைத் தோற்கடித்த அரூர்!

அரூரில் மட்டும் 39,675 வாக்கு முன்னிலை பெற்ற திமுக.
செளமியா அன்புமணி
செளமியா அன்புமணி
Published on
Updated on
1 min read

தருமபுரியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் செளமியா அன்புமணியின் தோல்விக்கு அரூர் சட்டப்பேரவைத் தொகுதி முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

செளமியா அன்புமணியை எதிர்த்து தருமபுரியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அ.மணி, 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் முன்னிலை பெற்ற செளமியா, நீண்ட நேரம் முன்னிலையில் இருந்ததால் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரூர் சட்டப்பேரவை தனித் தொகுதி தேர்தல் முடிவை புரட்டிப் போட்டது.

தருமபுரி, பாலகோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி, அரூர்(தனி), மேட்டூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது தருமபுரி மக்களவைத் தொகுதி.

வன்னியர் சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் இருக்கும் தருமபுரி மக்களவைத் தொகுதியில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவி செளமியா இந்த முறை களமிறக்கப்பட்டார்.

பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி மற்றும் தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக வேட்பாளரைவிட அதிகளவிலான வாக்கு வித்தியாசத்தை செளமியா பெற்றிருந்தார்.

செளமியா அன்புமணி
பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிடாவிட்டால்... உ.பி.யில் மேலும் 16 இடங்களில் பா.ஜ.க. அணி தோற்றிருக்கும்!

அதேபோல், பாலக்கோடு மற்றும் மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாமகவைவிட திமுக வேட்பாளர் மணி அதிக வாக்குகளை பெற்றிருந்தார்.

ஆனால், தலித் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய அரூர் சட்டப்பேரவை தனித் தொகுதியில் வழக்கம்போல் பாமகவுக்கு எதிராக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து அதிகளவிலான மக்கள் வாக்களித்துள்ளனர்.

மொத்தம் 2.15 லட்சம் மக்கள் தொகை கொண்ட அரூர் சட்டபேரவைத் தொகுதியில் பாதிக்கும் அதிகமானோர் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இந்த தொகுதியில் மட்டும் திமுக வேட்பாளருக்கு 86,850 வாக்குகள் கிடைத்துள்ளது. செளமியாவுக்கு 46,175 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

தருமபுரி, பென்னாகரம் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் அதிகளவிலான வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றாலும், அரூர் தொகுதி திமுகவுக்கு திருப்புமுனையாக அமைந்தது.

திமுக - அ. மணி - 4,32,667
பாமக - செளமியா அன்புமணி - 4,11,367
பேரவை வாரியாக பெற்ற வாக்குகள்
பாலக்கோடு - திமுக 71, 344; பாமக 60,878
பென்னாகரம் - திமுக 64,581; பாமக 76,166
தருமபுரி - திமுக 66,002; பாமக 79,527
பாப்பிரெட்டிபட்டி - திமுக 73,700; பாமக 82,434
அரூர்(தனி) - திமுக 86,850 ; பாமக 46,175
மேட்டூர் - திமுக 67,824; பாமக 63,265

அரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் கிட்டத்திட்ட 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்ற திமுக வேட்பாளர் மணி, கடைசி நேரத்தில் 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com