

பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் அண்ணாமலை இடம்பெறுவார் என்கிற பரபரப்பான செய்திகள் பரவி வருகின்றன.
பிரதமராக தொடா்ந்து 3-ஆவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) இரவு 7.15 மணியளவில் பதவியேற்கவுள்ளாா். அவருடன் புதிய அமைச்சா்களும் பதவியேற்கவுள்ளனா். இருப்பினும், பாஜக அமைச்சரவையில் யார், யாருக்கு அமைச்சர் பதவி, என்னென்ன இலாகா என்பது தொடர்பாக உறுதிப்படுத்தாதத் தகவல்கள் பரவி வருகின்றன.
அதன்படி, முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூத்த அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல் உள்ளிட்டோருக்கு புதிய அமைச்சரையிலும் இடம்பெறுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, தென் மாநிலங்களில் யார், யாருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளன என்கிற விவரத்தை தேசிய ஜனநாயக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, ஏற்கெனவே மத்திய இணையமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்கிற தகவல் பரவி வருகிறது.
அமைச்சரவையில் இந்த முறை புது முகங்களை அறிமுகப்படுத்த பாஜக முடிவு செய்திருக்கும் நிலையில் அதன் காரணமாகவே அண்ணாமலை உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எப்படியிருப்பினும், பாஜக அமைச்சரவை சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வந்துவிடும்.
தமிழகத்தின் முந்தைய பாஜக தலைவர்களில் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவியும், சி.பி.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு ஆளுநர் பதவிகளை பாஜக வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.