
தமிழகத்தில் நாற்பதுக்கு நாற்பதும் பெற்ற வெற்றிதான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்குக் கடிவாளம், இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்பு கவசம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவையில் ஜூன் 15ஆம் தேதி கொடீசியா அரங்கில் நடைபெறவிருக்கும் முன்பெரும் விழா குறித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், கட்சியினருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், செப்டம்பர் மாதத்தில்தானே முப்பெரும் விழா நடைபெறும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடன்பிறப்புகளான நீங்கள் கேட்பது உங்களில் ஒருவனான எனக்கும் கேட்கிறது. தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், திராவிட முன்னேற்றக் கழகம் உருவான நாள் ஆகியவற்றைக் கொண்டாடும் திராவிட மாதமான செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழாவை நடத்தி, கட்சியைக் காக்கும் பணியில் அயராது உழைத்த மூத்த நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தார் முன்னாள் முதல்வர் கரண்நிதி. அந்த முப்பெரும் விழாவுக்கு முன்பாக, ஒரு முன்னோட்ட விழாவாக ஜூன் 15-ஆம் நாள் கோவை கொடீசியா அரங்கில் இந்த முப்பெரும் விழா நடைபெறவிருக்கிறது.
மத்திய அரசில் பங்கேற்கும் வாய்ப்பில்லாத போது நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியால் தமிழ்நாட்டிற்கு என்ன இலாபம் என்று நமக்கு எதிர்முகாமில் இருக்கும் சிலர் கேட்பதைக் கவனிக்கிறேன். அது கேள்வி அல்ல, அவர்களின் தோல்விப் புலம்பல். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அறிந்தவர்களுக்கும் நன்கு தெரியும், தமிழ்நாட்டின் நாற்பதுக்கு நாற்பது உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பரவலான வெற்றிதான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசம் என்று தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
மேலும், 1957 பொதுத் தேர்தலில் பங்கேற்று மக்களவையில் இரண்டே இரண்டு உறுப்பினர்களைக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகம்தான், இந்தி ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தையும் காப்பாற்றும் வகையில், அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களிடமிருந்து உறுதிமொழியைப் பெற்றுத் தந்தது. தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுத் தந்த அந்த உறுதிமொழிதான் இன்றளவிலும் இந்தி ஆதிக்கத்திலிருந்து பெரும்பான்மையான மாநிலங்களைப் பாதுகாக்கும் அரணாகத் திகழ்கிறது.
1962-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில், ‘நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன்’ என்று பேரறிஞர் அண்ணாவின் முழக்கம்தான், மாநில உரிமைகளுக்கான வலிமையான முதல் குரல். அந்த ஒற்றைக் குரலின் தொடர்ச்சியாகத்தான் இன்று பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இருந்தும் உரிமைக் குரல்கள் ஒலிக்கின்றன. இத்தகைய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வலிமையை உணர்ந்திருக்கும் இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த நகர்வுகள்தான் இனி நாட்டின் வருங்காலத் திசை வழியைத் தீர்மானிக்கும்.
தமிழ்நாட்டில் நாம் பெற்றுள்ள வெற்றி, இந்தியா கூட்டணிக்கு மட்டுமின்றி, இந்திய ஜனநாயகத்திற்கும் நம்பிக்கையை அளித்திருப்பதால், கோவையில் நம் தோழமைக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள முப்பெரும் விழா என்பது மாபெரும் ஜனநாயகக் கொண்டாட்டமாக அமையவிருக்கிறது. மேற்கு மண்டலம் தங்களின் பட்டா நிலம் என்பது போல நினைத்துக்கொண்டு அங்குள்ள மக்களை வஞ்சித்து அரசியல் இலாபம் தேடிய கட்சிகளின் உண்மையான நிலை என்ன என்பதைக் கட்சிக்கும் அதன் கூட்டணிக்கும் அளித்துள்ள வெற்றியின் வாயிலாக மேற்கு மண்டல மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். அதனால்தான் கோவையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது என்று ஸ்டாலின் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.