செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

News image

முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்)

Updated On :16 ஜூன் 2024, 7:14 am

DIN

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என முதல்வர்ஸ் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாக 5 பேரை குஜராத் போலீஸ் கைது செய்ததை சுட்டிக்காட்டி அவர் தனது எக்ஸ் தளத்தில், நீட் தேர்வு தொடர்பாக நடைபெற்று வரும் சர்ச்சைகள், சமத்துவத்துக்கு எதிரான அதன் தன்மையை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்டு வந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்துக்காக மேலும் பல வாய்ப்புகளை நாம் வழங்க வேண்டும். மாறாக, அத்தகைய மாணவர்களுக்கான வாய்ப்புகளுக்கு நீட் தடை போடுகிறது.

தேசிய தேர்வு முகமை மேல் தவறில்லை என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் பேசியிருந்தாலும், நடந்து வரும் நிகழ்வுகள் அதற்கு மாறான சித்திரத்தையே அளிக்கின்றன.

தேர்வுக் கண்காணிப்பாளர்கள் பணம் பெற்றுக்கொண்டு OMR விடைத்தாள்களில் திருத்தம் மேற்கொண்டது, அதற்கு ஆதாரமாகப் பல கோடி ரூபாய்க்கான காசோலைகள், தொகை குறிப்பிடப்படாத காசோலைகள் கைப்பற்றப்பட்டது உள்ளிட்ட புகார்கள் மீது குஜராத் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்துள்ளனர். இந்தச் சதிச்செயலில் பள்ளி

முதல்வர், இயற்பியல் ஆசிரியர், பல நீட் பயிற்சி மையங்களும் கூட்டு சேர்ந்து ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு அமைப்புரீதியாகவே மாற்றம் தேவைப்படுவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

நீட் ஒழிப்புப் போராளி மாணவி அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்கள் இத்தேர்வினால் பரிதாபத்துக்குரிய முறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதை நாம் பார்த்துவிட்டோம். இனியும் பொறுக்கலாகாது.

தகுதிக்கான அளவுகோல் எனப் பொய்வேடம் தரித்த நீட் தேர்வு சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஊடுருவிப் பாதிக்கும் ஒரு மோசடி என்பது திரும்ப திரும்ப நிரூபணமாகிவிட்டது. மாணவர்களுக்கு எதிரான - சமூகநீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான இந்த நீட் முறையை ஆதரிப்பதை ஒன்றிய அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்!. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடா்பாக உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு உயா்நீதிமன்றங்களில் மனுக்கள் நிலுவையில் உள்ளன.

இதையடுத்து, 1,563 மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு அவா்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி மறுதோ்வு நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருந்தது. அதேபோல் நீட் குளறுபடிகள் தொடா்பான பிற மனுக்கள் மீது ஜூலை 8-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.