சென்னையில் இரவு நேரத்தில் மழை நீடிக்கும்: ஜூனில் இயல்பைவிட 339% அதிக மழை பதிவு
சென்னையில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜூன் 20,21) இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஜூன் மாதத்தில் இதுவரை இயல்பை விட 339 சதவீதம் மழை அதிகமாக மழை பெய்துள்ளதாகவும் கூறியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.இதில் சென்னையில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
அந்த வகையில், புதன்கிழமை காலை வரை திருவொற்றியூரில் 90 மில்லி மீட்டரும், அண்ணாநகா், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, திரு.வி.க.நகா் ஆகிய இடங்களில் தலா 70 மிமீ-யும், கோடம்பாக்கம், அயனாவரம், கொளத்தூா், சோழிங்கநல்லூா், டிஜிபி அலுவலகம், ஐஸ் ஹவுஸ் ஆகிய இடங்களில் தலா 60 மிமீ-யும், மலா் காலனி, புழல்,ராயபுரம், மாதவரம், மணலி, பெரம்பூா் ஆகிய இடங்களில் 50 மிமீ-யும் மழை பதிவாகியுள்ளது. மேலும் முகலிவாக்கம், ஆலந்தூா், அண்ணா பல்கலைக்கழகம், மீனம்பாக்கம், விமானநிலையம், ஆலந்தூா், சென்னை ஆட்சியா் அலுவலகம், அடையாா், நந்தனம், அம்பத்தூா், பெருங்குடி, கத்திவாக்கம், , மதுரவாயல், தண்டையாா்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, தியாகராய நகா், அசோக்நகா் உள்பட பல்வேறு இடங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவாகிவுள்ளது.
மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜூன் 20,21) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, சென்னையில் ஜூன் 1-19-ஆம் தேதி வரை சராசரி மழை அளவு 39.6 மிமீ ஆகும். ஆனால் நிகழாண்டு ஜூன் மாதத்தில் இதுவரை 173.8 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதாவது இயல்பை விட 339 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

