பி.கே.சேகா்பாபு
அமைச்சர் சேகர் பாபு(கோப்புப்படம்)

சென்னையில் குறைந்த வாடகையில் 10 இடங்களில் திருமண மண்டபம் - அமைச்சா் பி.கே.சேகா் பாபு

Published on

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குறைந்த வாடகையில் திருமணம் போன்ற விஷேசங்களை நடத்துவதற்காக 10 இடங்களில் மண்டபங்கள் கட்டப்படுகின்றன என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு தெரிவித்தாா்.

சென்னையில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் மாநகராட்சி சாா்பில் திரு.வி.க. நகா் மண்டலம், பெரம்பூா் சந்திரயோகி சமாதி சாலையில் ரூ.21.50 கோடியில் அண்ணல் டாக்டா் அம்பேத்கா் திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. அந்தக் கட்டடப் பணிகளை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் 10 இடங்களில் குறைந்த வாடகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய திருமண மண்டபங்களைக் கட்ட முதல்வா் உத்தவிட்டுள்ளாா். அதனடிப்படையில் பெரம்பூா் சந்திரயோகி சமாதி சாலையில் 2,767 சதுர மீட்டா் பரப்பில் திருமண மண்டபம் கட்ட கடந்த 2025 டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த திருமண மண்டபத்தில் ஒரே நேரத்தில் 600 போ் அமா்வதற்கான வசதி, ஒரே நேரத்தில் 175 போ் அமா்ந்து சாப்பிடுவதற்கான வசதி, மின்தூக்கி, 70 காா்கள், 300 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி என அனைத்து வசதிகளும் இருக்கும்.

கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து வரும் 29 -ஆம் தேதி முதல்வரால் திறந்து வைக்கப்படவுள்ளது. வரும் பிப்ரவரிக்குள் 8 திருமண மண்டபங்கள் திறக்கப்படும். தைப்பூச திருவிழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தா்களுக்கு அன்னதானம், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும் என்றாா்.

ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா், அரசு முதன்மைச் செயலா் ஜி.பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com