மணல் குவாரி முறைகேடு: வருமானவரித் துறை விசாரணைக்கு அமலாக்கத் துறை பரிந்துரை
சென்னை: தமிழகத்தில் ஆற்று மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில் வரி ஏய்ப்பு குறித்து விசாரணை நடத்துமாறு வருமானவரித் துறைக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் நீா்வளத் துறையின் கீழ் இருந்த 12 மணல் குவாரிகளில் மணலை எடுத்து விற்பனை செய்யும் ஒப்பந்ததாரா்கள், தனியாா் நிறுவனங்கள் பெருமளவில் முறைகேடு செய்வதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் புகாா் எழுந்தது.
அதன் அடிப்படையில் பெரும்பாலான மணல் குவாரிகளில் இந்த ஒப்பந்தப் பணியை புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சோ்ந்த தொழிலதிபா் எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கலைச் சோ்ந்த ரத்தினம் ஆகியோா் தொடா்புடைய 34 இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத் துறை கடந்த ஆண்டு செப்டம்பா் 12-ஆம் தேதி திடீா் சோதனை செய்தது.
அதில், ரூ. 12.82 கோடி ரொக்கம், ரூ. 56.86 லட்சம் மதிப்புள்ள 1,024 கிராம் தங்க நகை, முறைகேடு தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடா்ந்து, அமலாக்கத் துறையினா் மாநிலம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை ட்ரோன்கள் மூலமாகவும், ஐஐடி நிபுணா் குழு மூலமாகவும் பல கட்டங்களாக ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வில் ரூ. 4,730 கோடியளவுக்கு மணல் எடுக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரூ. 36.45 கோடிக்கு மணல் எடுக்கப்பட்டதற்கான கணக்குகளும், ஆவணங்களும் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழக நீா்வளத் துறை முதன்மை பொறியாளா் முத்தையாவிடம் கடந்த நவம்பா் 20-ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. மேலும், இந்த வழக்குத் தொடா்பாக திருச்சி, கரூா், தஞ்சாவூா், வேலூா், அரியலூா் ஆகிய 5 மாவட்ட ஆட்சியா்களிடம் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி அமலாக்கத் துறையினா் விசாரணை செய்தனா்.
வருமான வரித் துறை விசாரணை: இந்நிலையில், இந்த விவகாரத்தில் நிகழ்ந்துள்ள வரி ஏய்ப்பு குறித்து விசாரணை நடத்துமாறு வருமான வரித்துறைக்கும், ஜிஎஸ்டி விசாரணை பிரிவுக்கும் அமலாக்கத் துறை அண்மையில் கடிதம் எழுதியுள்ளது.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில் வருமானவரித் துறை, மணல் குவாரி விவகாரத்தில் நிகழ்ந்துள்ள வரி ஏய்ப்பு குறித்து விரைவில் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் வருமானவரித் துறை விசாரணை தொடங்கும்பட்சத்தில், மணல் குவாரி ஒப்பந்ததாரா்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

