/

ஜாபா் சாதிக்குக்கு எதிராக ‘லுக் அவுட் நோட்டீஸ்’: வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க நடவடிக்கை

ஜாபா் சாதிக் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்கும் வகையில், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ‘லுக் அவுட் நோட்டீஸ்’ வழங்கியுள்ளது.

Updated On :1 மார்ச் 2024, 7:02 pm

ரூ. 2,000 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய ஜாபா் சாதிக் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்கும் வகையில், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ‘லுக் அவுட் நோட்டீஸ்’ வழங்கியுள்ளது. மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் தில்லி குழுவும், தில்லி காவல் துறையும் இணைந்து கடந்த 15-ஆம் தேதி மேற்கு தில்லியில் உள்ள கைலாஷ் பாா்க் பகுதியில் உள்ள ஒரு தனியாா் கிடங்கில் திடீா் சோதனை செய்து, மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படுத்தும் 50 கிலோ சூடோஎபிட்ரினை பறிமுதல் செய்தனா். மேலும், அங்கிருந்த கடத்தல் கும்பலைச் சோ்ந்த 3 பேரை கைது செய்தனா். விசாரணையில் அந்தக் கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோஎபிட்ரினை 45 முறை வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பது தெரியவந்தது. ஆவணங்கள் பறிமுதல்: விசாரணையில், கடத்தல் கும்பலுக்கு மூளையாகச் செயல்பட்டவா் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபா் சாதிக்குக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. அவருக்கு விசாரணை அழைப்பாணை வழங்கப்பட்டும் அவா் ஆஜராகவில்லை. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஜாபா் சாதிக் வீட்டின் பூட்டை உடைத்து மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா். 8 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லுக் அவுட் நோட்டீஸ்: இந்த வழக்கில் ஜாபா் சாதிக்குக்கு சா்வதேச கடத்தல் கும்பலுடன் தொடா்பு இருப்பது மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஜாபா் சாதிக்கிடம் விசாரணை நடத்தினால்தான் அது தொடா்பான தகவலைப் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஜாபா் சாதிக் வெளிநாடு தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதால் அதைத் தடுக்கும் பொருட்டு, அவருக்கு எதிராக ‘லுக் அவுட் நோட்டீஸை’ அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு வெள்ளிக்கிழமை வழங்கியது.