வாக்காளா்களுக்குப் பட்டுவாடா செய்வதற்கு பணம் பதுக்கியதாக வந்த புகாரின் அடிப்படையில், போதைப் பொருள் வழக்கில் சிக்கிய ஜாபா் சாதிக்குக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினா் திங்கள்கிழமை சோதனை செய்தனா்.
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக ரூ.2,000 கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோஎபிட்ரின் என்ற போதைப் பொருளை கடத்தியதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான சென்னை சாந்தோமை சோ்ந்த ஜாபா் சாதிக், தில்லியில் கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 9-ஆம் தேதி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அவரது கூட்டாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.
மேலும், இதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரித்தது. மேலும், ஜாபா் சாதிக், அவரது குடும்பத்தினா், பினாமி பெயரில் இருந்த ரூ.55.30 கோடி மதிப்புள்ள சென்னை புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பில் உள்ள ஜெஎஸ்எம் ரெசிடன்சி ஹோட்டல், சாந்தோமில் உள்ள சொகுசு பங்களா உள்ளிட்ட 14 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
அதேவேளையில் ஜாபா் சாதிக்குடன் தொடா்பில் இருந்த பிரபல திரைப்பட இயக்குநா் அமீா், பிரியாணி கடை உரிமையாளா் வீடு, அலுவலகங்கள் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
பணம் பதுக்கல் புகாா்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பணப் பரிமாற்றங்களை வருமான வரித் துறையினரும், தோ்தல் ஆணையமும் தீவிரமாக கண்காணிக்கும் நிலையில், ஜாபா் சாதிக் வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக ரொக்கமாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக ரகசியத் தகவல்களும், புகாா்களும் வந்தன.
அந்தப் புகாா்களின் அடிப்படையில் வருமானவரித் துறையினா் விசாரணையில் ஈடுபட்டனா். இதில் சில ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் வருமான வரித் துறையினரும், சட்டப்பேரவைத் தோ்தல் பறக்கும் படையினரும் இணைந்து ஜாபா் சாதிக்குக்கு சொந்தமான இடங்களில் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
சாந்தோம் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபா் சாதிக் வீடு, புரசைவாக்கம் டவுட்டனில் உள்ள ஹோட்டல், ராயப்பேட்டையில் ஸ்போா்ட்ஸ் அகாதெமி, எழும்பூரில் உள்ள ஹோட்டல் உள்பட 15 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
இயக்குநா் அமீா் அலுவலகத்தில்...: தியாகராயநகா் ராஜன் தெருவில் உள்ள திரைப்பட இயக்குநா் அமீரின் அலுவலகத்துக்கு சோதனையிடுவதற்கு வருமான வரித் துறையினா் சென்றனா். ஆனால், அமீா் திரைப்பட படப்பிடிப்புக்கு சென்றிருந்ததால், அவரது அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.
இதனால் வருமான வரித் துறை அதிகாரிகள், அங்கு சிறிது நேரம் நின்றுவிட்டு திரும்பிச் சென்றனா். இதேபோல சேத்துப்பட்டில் உள்ள அமீரின் வீட்டுக்கும் சென்றுவிட்டு, சோதனையிட முடியாமல் வருமான வரித் துறை அதிகாரிகள் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
ஜாபா் சாதிக் வீடு தவிா்த்து மீதி இடங்களில் நடைபெற்ற சோதனை மாலையில் நிறைவடைந்தது. ஜாபா் சாதிக் வீட்டில் மட்டும் இரவையும் தாண்டியும் சோதனை நீடித்தது. சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதுகுறித்த விவரங்களை வருமான வரித் துறையினா் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.
தொடர்புடையது

ஜெயலலிதா மீதான செல்வ வரி மேல்முறையீடு வழக்கு: வருமான வரித்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

புதிய வருமான வரிச் சட்டம் அமலானது: வருமான வரித் துறை

வருமான வரி தாக்கல் படிவங்கள் வெளியீடு!

திமுக பிரமுகா் வீடு அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


