எழுத்தாளார் அஸ்வகோஷ் (எ) இராசேந்திர சோழன் காலமானார்

எழுத்தாளார் அஸ்வகோஷ் என அறியப்படும் இராசேந்திர சோழன் (79) வெள்ளிக்கிழமை காலமானார்.
எழுத்தாளார் அஸ்வகோஷ் (எ) இராசேந்திர சோழன்
எழுத்தாளார் அஸ்வகோஷ் (எ) இராசேந்திர சோழன்

சென்னை: தமிழிய சிந்தனையாளரும், மண்மொழி இதழின் ஆசிரியருமான எழுத்தாளர் அஸ்வகோஷ் என அறியப்படும் இராசேந்திர சோழன் (79) உடல்நலக் குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) காலமானார்.

அவரது உடல், அவர் விருப்பப்படி, வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் எழும்பூர் நீதிமன்றம் அருகே நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள அவர் மகன் வீட்டில் இருந்து அரசு மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்படுகிறது என நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவியும், ஒரு மகளும் மகனும் உள்ளனர். மகள் சிதம்பரத்தில் வசித்து வருகிறார். மகன் ஆர்.பார்த்திபன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றுகிறார்.

எழுத்தாளார் அஸ்வகோஷ் (எ) இராசேந்திர சோழன்
கீழடி அகழாய்வுப் பொருள்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு

எழுத்தாளர் இராசேந்திர சோழன் 1945 டிசம்பர் 17 ஆம் தேதி தென்னார்க்காடு மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் பிறந்தார். தாயும் தந்தையும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். 1961-இல் பள்ளியிறுதி வகுப்பு முடித்தார். தந்தை ஆசிரியர் பயிற்சிக்குச் செல்லும்படி் சொல்ல அதை மறுத்து சென்னைக்குச் சென்று பல வேலைகள் செய்து வாழ்ந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் 1965 இல் திரும்பிவந்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து தகுதி பெற்றார்.

1968-இல் ஆசிரியராகி இருபது ஆண்டு காலம் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் வசித்து வந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.

எழுத்தாளார் அஸ்வகோஷ் (எ) இராசேந்திர சோழன்
இராசேந்திர சோழன்: தோற்றத்தில் மட்டுமல்ல, எழுத்திலும் பேச்சிலும் கம்பீரம்!

தமிழ் எழுத்தாளர். மார்க்ஸிய பார்வை கொண்டவர். பின்னர் தமிழ்த் தேசியப் பொதுவுடைமைப் பார்வை என மாற்றிக்கொண்டார். வட தமிழகத்து அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதிய படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எனக் கலை இலக்கியத்திலும்; அரசியல், அறிவியல், தத்துவம், போராட்டம் எனப் பொது வாழ்விலுமாக, வாழ்க்கையின் பெரும்பகுதியை சமூகச் செயற்பாடுகளால் நிறைத்தவர்.

அரசியல் வாழ்க்கை

இராசேந்திர சோழன் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கங்களில் ஈடுபட்டு அதன் வழியாக இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்ஸிஸ்ட்) யின் கலை இலக்கியச் செயல்பாடுகளுடன் இணைந்தார். அவர்களின் அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். பின்னர் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியுடன் (மார்க்ஸிஸ்ட்) கருத்துவேறுபாடு கொண்டு பின்னர் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியில் (மார்க்ஸிஸ்ட்- லெனினிஸ்ட்) சிலகாலம் ஈடுபட்டார். 1992-இல் சோவியத் ரஷியாவின் பிரிவுக்குப் பின் மார்க்ஸிய அமைப்புகளில் தேசியம் சார்ந்த உரையாடல்கள் தொடங்கின. இந்தியத் தேசியம் என்னும் அமைப்பை ஏற்க முடியாதென்றும், தமிழ்த்தேசியம் போன்ற பண்பாட்டுத் தேசிய உருவகங்களை ஏற்றுக்கொண்டு அவற்றின் அடிப்படையில் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்றும் கூறும் ஒரு தரப்பினர் உருவாயினர்.

இராசேந்திரசோழன் தமிழ்த் தேசிய அரசியல் மேல் நம்பிக்கை கொண்டவர். 'தேசிய இன விடுதலைக்கான தேடலையும் உள்ளடக்கியது தான் மார்க்ஸியம். மார்க்ஸியம் வேறு; தேசியம் வேறு என்ற மனநிலை பொதுவாக நிறையப் பேரிடம் உள்ளது. அப்படி இல்லை’ என தன் அரசியல் நிலைப்பாட்டை பல செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளர் இராசேந்திரசோழன் மறைவுக்கு தமுஎச அஞ்சலி

எழுத்தாளர் இராசேந்திரசோழன் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

மாநிலத்தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புனைவிலக்கியத்திற்கும் முற்போக்கு கருத்துலகிற்கும் 1970 முதலாக காத்திரமான பங்களிப்பினைச் செய்துவந்த அஸ்வகோஷ் எனும் தோழர் ராசேந்திர சோழன் இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக, தோழர் கே.முத்தையாவின் தலைமையில் தீவிரமாக இயங்கியவர். சிறுகதைகள் மட்டுமின்றி ஏராளமான அரசியல், வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.

அவரது முதல் சிறுகதைத்தொகுதியான 'பறிமுதல்' போலவே பின்னர் வந்த ‘எட்டுக்கதைகள்’ தொகுப்பும் பரவலான கவனம் பெற்றது. பத்துக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகளும் மூன்று நாவல்களும் வெளியிட்டுள்ளார்.

பாதல் சர்க்காரின் நாடகப் பட்டறையில் பயிற்சிபெற்று, பல நாடகங்களை இயக்கி அரங்கேற்றினார். அவசர நிலைக்கு எதிரான அவரது விசாரணை என்கிற நாடகம் பல ஊர்களில் நிகழ்த்தப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கு நாடக முகத்தை வழங்கிய முன்னோடி. பல மாவட்டங்களில் நாடகப்பட்டறை நடத்தி தமுஎச நாடகக்குழுக்களை உருவாக்குவதற்கு உதவினார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிற்காலத்தில் தமுஎசவில் இருந்து விலகியிருந்தாலும் இறுதிவரை ஓர் இடதுசாரியாகவே வாழ்ந்தவர். முற்போக்கு இலக்கிய இயக்கத்திற்கு பெரும்பங்காற்றி மறைந்துள்ள தோழர் ராசேந்திர சோழன் மறைவுக்கு தமுஎச தனது அஞ்சலியை உரித்தாக்குகிறது என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com