இராசேந்திர சோழன்: தோற்றத்தில் மட்டுமல்ல, எழுத்திலும் பேச்சிலும் கம்பீரம்!

அஞ்சலி: மறைந்த எழுத்தாளர் இராசேந்திர சோழன் நினைவாக...
இராசேந்திர சோழன் (2004-ல்)
இராசேந்திர சோழன் (2004-ல்)கோப்பு

தமிழ் இலக்கிய உலகின் ஆகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவர் மறைந்த  எழுத்தாளர் அஸ்வகோஷ் என்ற இராசேந்திர சோழன்.

தோற்றத்தில் மட்டுமல்லாமல், கதையோ, கட்டுரையோ, நாவலோ, எழுத்திலும் மொழி நடையிலும் கம்பீரத்தைக் கைக்கொண்டிருந்தவர். பேச்சும் உரையும்கூட அப்படித்தான்.

2004 ஆகஸ்ட் மாதத்தில் இலக்கியச் சுற்றத்தின் இராசேந்திர சோழன் கதைகள் நூல் அறிமுக விமர்சனக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் திருச்சி வந்திருந்த இராசேந்திர சோழன், எழுத்து பத்திக்காகத் ‘தினமணி’க்கு அளித்த நேர்காணல் இது.

சில மாதங்களுக்கு முன்னர், இராசேந்திர சோழனுடன் உரையாடியது யார் என்பதை அறிந்துகொள்வதற்காக இந்த நேர்காணலின் செய்தி நறுக்கை அனுப்பியிருந்தார் நண்பர். இவ்வளவு விரைவில் இதைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று அப்போது தோன்றவில்லை.

நேர்காணல் அன்று வெளியானவாறே:

‘கோட்பாடு, செய்நேர்த்தி கொண்டிருக்க வேண்டும் இலக்கியம்’

எழுதத் தொடங்கியபோது எந்த இசங்களையும் சார்ந்திருக்கவில்லை நான் என்று சொல்லும் இராசேந்திர சோழன், இன்றும்கூட இசங்களுக்கு அப்பாற்பட்டவராகவே தோன்றுகிறார்.

1970-களில் அஸ்வகோஷ் என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கிய இவர் ஆசிரியப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின் இயற்பெயரிலேயே படைக்கத் தொடங்கினார்.

சிறகுகள் முளைத்து, 21-வது அம்சம் இரண்டும் இவருடைய நாவல்கள். சிறுகதைகள் யாவும் 'இராசேந்திர சோழன் கதைகள்’ என முழுத் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.

“எழுதும் காலத்தில் என்னையுமறியாமல் சார்பான சிந்தனை உருவானது” என்று கூறும் இராசேந்திர சோழனின் இன்றைய கருத்து:

“கருத்தியல் சார்ந்த விஷயங்களைக் கேள்விக்கு உள்படுத்த வேண்டும் என்பதே இலக்கியத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். கோட்பாடு, செய்நேர்த்தி இரண்டும் இணைவாகக் கொண்டிருக்க வேண்டும் இலக்கியம். படைப்பு நுட்பம் சார்ந்த விஷயங்களை அதன் சூழலைப் பொருத்துப் பார்க்க வேண்டும்.”

அண்மையில் திருச்சி வந்திருந்த அவருடன் ஒரு சந்திப்பு:

பொதுவுடைமைக் கருத்து சார்பு பற்றிய இன்றைய கருத்து என்ன?

“பொதுவுடைமைச் சிந்தனைதான் ஒரு படைப்பாளியை ஆழ்ந்த நேசிப்புள்ளவனாக மாற்றுகிறது. என்னையும் அப்படித்தான் மாற்றியது. ஆனால், அதை மட்டுமே வைத்துக்கொண்டு எவரும் தங்கள் படைப்பை, பலவீனத்தை நியாயப்படுத்தும் போக்கில் எனக்கு உடன்பாடில்லை.

இராசேந்திர சோழன் (2004-ல்)
எழுத்தாளார் அஸ்வகோஷ் (எ) இராசேந்திர சோழன் காலமானார்

“முற்போக்கு எழுத்தாளர்கள் கணிசமாக இருக்கின்றனர். ஆனால், நிறுவனமயமாகும்போதுதான் கட்டுத்திட்டங்கள் வருகின்றன.

“இலக்கியத்தை மார்க்ஸ், எங்கெல்ஸ், மாவோ பார்த்த அளவுக்கு விரிவான நோக்கில் பார்க்கும் தலைவர்கள் இங்கில்லை. இடதுசார்பாக எழுதுவதாலேயே தங்களை விமர்சிக்கக் கூடாது என்று நினைப்பது சரியல்ல.”

அரசியல் சார்ந்த இதழ்கள் போலவே இன்றைய சிறுபத்திரிகை உலகமும் குழுக்களாக இருக்கின்றன. இதுவும் இலக்கியச் சூழலை ஒரு வரையறைக்குள் இட்டுச் செல்லத்தானே முயல்கின்றன?

“உண்மைதான். படைப்பாளிகள் சார்ந்த இதழ்களும் குழு மனப்பான்மையும் சிறுபத்திரிகை உலகில் இருக்கின்றன. இருந்தாலும்கூட, இந்தக் குழுக்கள், குழுசார் சுதந்திரத்துடன் இயங்குகின்றன; மீறித் தனிநபர் சுதந்திரமும் இருக்கிறது. “நிறுவனமாக்கப்பட்ட அரசியல் சார்ந்த இதழ்களில் இந்நிலைமை இருப்பதில்லை. இலக்கியத்தில் சில விஷயங்கள் தாண்டிச் செல்ல கட்சி அமைப்புகள் அனுமதிக்க வேண்டும்.”

படைப்பு எப்படி இருக்க வேண்டும்?

“கருத்துகள் படைப்பில் வெளிப்படாமல் வாசிப்பவரின் மத்தியில் தூண்ட வேண்டும்: பக்கச்சார்பாக இருந்தால் அதுவே திகட்டலாகிவிடும்.

“நியாயத் தீர்வு எடுப்பவனாகப் படைப்பாளன் இருக்கக் கூடாது; நியாயத் தீர்ப்பு எடுக்கச் செய்பவனாக இருக்க வேண்டும். ஒரேயொரு ஒளிக்கீற்றைத் தோன்றச் செய்தாலும் போதும்.

“சமூகம் என்ன சொல்லுமோ என்ற கட்டுப்பாடுகள் இங்கிருக்கின்றன. சமூகம் சார்ந்த மதிப்பீடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.

“தன்னுடைய புரிதலில் பார்த்த நிகழ்வுக்கு உண்மையாக முன்வைக்கப்பட்டால் அதுவே நல்ல படைப்பு. இசங்களை முன்வைத்தால் பாதிக்கும்.”

படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையேயான மொழி இயல்பாக இன்றிச் சிக்கலாக மாற்றப்படும்போது வாசிப்பதில் தடை ஏற்படாதா?

“படைப்பாளனுக்கும் வாசகனுக்குமுள்ள உறவு, தன் அனுபவத்தில் படைப்பாளன் வெளிப்படுத்த, வாசகன் அவன் அனுபவத்தில் பார்க்கிறான். அதற்கு வாசகனும் படைப்பாளியின் அனுபவத் தளத்துக்கு உயரும்போது மொழிச் சிக்கல் இருக்காது. அதற்காக வேண்டுமென்றே மொழிநடையைச் சிக்கலாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.

“அனுபவ நெருக்கத்தில் வாசகன் தன்னையே படைப்பில் காண்கிறான். படைப்பு என்பது வாசகனைச் சென்றடைய வேண்டும்.”

சிறுகதை வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

“அம்பு அல்லது ஸ்ப்ரிங்கைப் போல இருக்க வேண்டும் சிறுகதையின் வடிவமும் பண்பும். இலக்கை நோக்கி விடுபட்டுத் தெறிக்கும்.

“இந்த வகையில் எழுத்தாளர்களில் எனக்குப் பிடித்தவர்கள் புதுமைப்பித்தனும் தி. ஜானகிராமனும்.”

பின்நவீனத்துவத்தை ஏன் கடுமையாக விமர்சிக்கிறீர்கள்?

“வரலாற்றில் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு தத்துவம் மனிதனுக்கு நம்பிக்கையூட்டுபவையாக இருந்துவந்துள்ளன. கிறித்தவம், அறிவார்ந்த உலகம் என.

“பின் நவீனத்துவம் என்பது ஒரு தத்துவமேயல்ல. இதுவரையுள்ள தத்துவங்களைக் கேள்விக்குள்ளாக்குவது. அது முன்வைப்பது வெற்றிடத்தைத்தான். மனிதனைச் செயல்படவிடாமல் முடக்குவதுதான் பின் நவீனத்துவம்.

“பின் நவீனத்துவத்துக்கு இளம் படைப்பாளிகள் பலியாகிவிடக் கூடாது. வாழ்க்கையின் உண்மையை உணரத் தடையாக இருந்துவிடக் கூடாது அது.”

இதுவரை மற்றவர்கள் சொல்லாததை எழுத முடியுமானால் எழுதுங்கள், இல்லையெனில் எழுதாதீர்கள் என்று சொல்கிறீர்கள். ஒரு படைப்பு எழுதி முடித்த பிறகுதானே அதை தீர்மானிக்க முடியும்?

“படைக்க வருவோர் தங்கள் சொந்த அனுபவத்தைப் பதிவு செய்யலாம். மேலை இலக்கியங்களை முன்னுதாரணமாக வைத்து எழுதுவதால் எந்தச் சிறந்த படைப்பையும் தந்துவிட முடியாது. அவற்றின் நகல்களாக இருக்கக் கூடாது.

“ஒரு ஓட்டல் சர்வரும் மனிதன்தான் என்று புதுமைப்பித்தன் பார்க்கும் பார்வையிலேயே மீண்டும் பார்க்கத் தேவையில்லை. வேறு விஷயங்களை வேறு கோணங்களில் பார்த்து வெளிப்படுத்தலாம். அதை மனதில் கொண்டுதான், புதிதாகப் படைக்க முடியாவிட்டால் எழுதாதீர்கள் என்று சொல்கிறேன்.”

பெண் கவிஞர்கள் பாலியலை வெளிப்படையாகப் பேசும் கவிதைகளை எழுதுகின்றனர். இவை இயல்பாக இல்லாமல் வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக எழுதப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுகிறது...

“இங்கே பெண் சார்ந்த ஒழுக்கவியல் கோட்பாடுகள் வலுவாக இருக்கின்றன. இதையே இன்னமும் உடைக்க முடியவில்லை.

“பெண் படைப்பாளிகளின் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மிக நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டவர்கள், ஒரு கலகக்குரல் எழுப்புவது இயல்பு. யார் ஆதிக்கம் செலுத்தினார்களோ அவர்கள்தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். அவர்கள் எழுத எழுத இந்த விஷயங்கள் குறைந்து போய்விடும். ஆனால் ஆண் சாராமல் வாழ்வதுதான் பெண் விடுதலை என்ற கருத்து சரியல்ல.  ஆணுக்குச் சமமாக இருக்க வேண்டும், ஆணுடன் இணைந்து வாழ்வதுதான் இயற்கை வாழ்க்கை.”

மண்ணை அளந்தவர்கள் நூலை இராசேந்திர சோழன் வெளியிடப் பெற்றுக்கொள்கிறார் பொறியாளர் இரா. வெங்கடசாமி.
மண்ணை அளந்தவர்கள் நூலை இராசேந்திர சோழன் வெளியிடப் பெற்றுக்கொள்கிறார் பொறியாளர் இரா. வெங்கடசாமி.

மறைந்த பாசனப் பொறியியல் வல்லுநர் முனைவர் பழ. கோமதிநாயகத்தின்  மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் அவர் எழுதிய இரு நூல்களின் வெளியீட்டு விழாவுக்காகத் திருச்சிக்கு மீண்டும் (2012 டிச. 29) அழைத்திருந்தோம்.

விழாவில் கோமதிநாயகத்தின் முனைவர் பட்ட ஆய்வையொற்றி, ஆங்கிலத்தில்,  தாமிரவருணி – சமூக பொருளியல் மாற்றங்கள் (Thamiravaruni: Conflicts Over Water Resources)  என்ற ஆங்கில நூலும் நிலவரை - நில அளவை பற்றி அவர் எழுதியிருந்த `மண்ணை அளந்தவர்கள்' என்ற நூலும் வெளியிடப்பட்டது. மண்ணை அளந்தவர்கள் நூலை வெளியிட்டுப் பேசினார் இராசேந்திர சோழன். விழா முடிந்த பின் உணவருந்திவிட்டு, நள்ளிரவிலேயே மயிலத்துக்கு பேருந்திலேற்றி அனுப்பி வைத்தோம்.

வெறும் எழுத்தாளராக மட்டுமின்றித் தீவிர செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தவர். ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டதாக இருந்தாலும் இன்றைக்கும் படித்துப் பார்க்க அவருடைய நேர்காணல் அதே காத்திரத்துடன், கூர்மையுடன் திகழ்கிறது. அவர்தான் இராசேந்திர சோழன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com