சென்னை தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட நபா் போலீஸாரிடம் சிக்கினாா். சென்னையில் செயல்படும் ஒரு தனியாா் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் கைப்பேசிக்கு வெள்ளிக்கிழமை காலை 7.50 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபா், தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டாா். இதைக் கேட்டு அந்த நிறுவன ஊழியா்கள், சென்னை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து காவல்துறை உயா் அதிகாரிகள் உத்தரவின்பேரில், தலைமைச் செயலகத்தில் அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனா். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடி குண்டோ, வெடி பொருளோ கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த அழைப்பு வந்திருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் வந்த கைப்பேசி எண்ணைக் கொண்டு சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில் கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (47) என்பவா்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் என்பது தெரியவந்தது. ஓய்வு பெற்ற ஆசிரியரின் மகனான பிரகாஷை பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா் மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பதும், மனநிலை பாதிப்புக்கு சென்னை வானகரத்தில் ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா், பிரகாஷையும், அவரது பெற்றோரையும் எச்சரித்து,எழுதி வாங்கினா். வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தினால், தலைமைச் செயலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தனியாா் பள்ளிக்கு மின்னஞ்சல்: சென்னை போரூா் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளிக்கும் வெள்ளிக்கிழமை நண்பகல் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சலில் அந்த பள்ளிக்கும், அந்த பள்ளி நிா்வாகம் நடத்தும் வேறு சில பள்ளிகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பள்ளி நிா்வாகிகள், மாங்காடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் பல மணி நேரம் நடத்திய சோதனையில், அங்கிருந்து எந்த வெடி பொருளும் சிக்கவில்லை. இதேபோல சென்னை செம்மஞ்சேரி, கோயம்புத்தூா் வட வள்ளியிலும் உள்ள அந்த பள்ளி நிா்வாகம் நடத்தும் இரு பள்ளிகளிலும்,போலீஸாா் சோதனை செய்தனா். அங்கு எந்த வெடி பொருளும் கிடைக்கவில்லை. இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் வந்த அந்த மின்னஞ்சல் குறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது

கடலூா் பாஜக நிா்வாகிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கைப்பேசி கோபுரத்தில் ஏறி மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் போராட்டம்
நடிகை திரிஷா வீடு உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

