திருவாரூர் முத்துப்பேட்டையில், ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம்: முதல்வர்

திருவாரூர் முத்துப்பேட்டையில், ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.3.2024) மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் திறப்பு விழா, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது:

"தமிழ்நாடு வருவாய்த்துறை வரலாற்றிலேயே, கிராமப்புற நத்தம் பட்டாவை கணினி மூலமாக வழங்குவது இதுதான் முதல்முறை! காணி நிலம் வேண்டும் என்று மகாகவி பாரதியார் பாடினார். அதைக் கணினி மூலமாக உறுதி செய்கின்ற திட்டம் இது!

முதல்கட்டமாக, 75 இலட்சத்து 33 ஆயிரத்து 102 பட்டாதாரர்கள் இந்த இணையவழி சேவை மூலமாக பயன்பெற போகிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதுமட்டுமல்லாமல், இந்த விழாவில் இன்னும் சில அறிவுப்புகளை வெளியிடுவதில் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன். 150-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்து, சிறப்பாக செயல்பட்டு வருகின்ற மயிலாடுதுறை நகராட்சிக்கு, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நகராட்சி கட்டடம் கட்டப்படும்.

அதேபோல, வேளாண் பெருங்குடி மக்களுடைய நீண்டகால கோரிக்கைகளை ஏற்று, சீர்காழி வட்டம் பெருந்தோட்டம் கிராமத்தில் செல்லனாற்றின் குறுக்கிலும், சென்னம்பட்டினம் கிராமத்தில் முல்லையாற்றின் குறுக்கிலும், தரங்கம்பாடி வட்டம் சந்திரப்பாடி கிராமத்தில் நண்டலாற்றின் குறுக்கிலும், உப்பு நீர் புகுவதை தடுக்கின்ற வகையில், கடைமடை நீர் ஒழுங்கிகள் 94 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

அத்துடன் குத்தாலம் வட்டத்தில் வாணாதி ராஜபுரம் மற்றும் அரையபுரம் வாய்க்கால் பாசன உழவர்கள் பயன்பெறுகின்ற வகையில், கடலங்குடி கிராமத்தில் 2 கோடியே 40 லட்ச ரூபாய் செலவில் புதிய படுக்கை அணை அமைக்கப்படும். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்களின் கோரிக்கைகளை ஏற்று, அவர்களுக்காகவும் சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.

கோப்புப்படம்
‘மோடியின் குடும்பம்’: எக்ஸ் தளத்தில் பெயர் மாற்றிய அமித் ஷா, மத்திய அமைச்சர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் வாணகிரி மீன் இறங்குதளம் 30 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். நாகை மாவட்டம் செருதூர் வெள்ளையாறு முகத்துவாரத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரை பாதுகாப்புச் சுவர் அமைக்கப்படும்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். அடுத்து, பூம்புகார் பகுதி மீனவர்கள் பயன்பெறும் வகையில், 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உலர்மீன் தயாரிக்கும் குழுமம் அமைக்கப்படும்.

மென்பொருளுடன் ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை அமைப்பு திட்டத்தின்கீழ் திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருக்கின்ற 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் மூன்று பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு 1642 மேசை கணிணிகள் மற்றும் கணினிசார் உபகரணங்கள் வழங்கப்படும்.

அதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு சிறப்பான நூலகம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்திருந்தோம். அந்த அறிவிப்பை செயல்படுத்த “பார்க் அவென்யூ” பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அங்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சிறப்பான நூலகம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com