
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூரில் ஜல்லிக்கட்டில் போட்டி நடைபெற்று வருகிறது.
ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கிவைத்தார்.
தொடர்ந்து, வாடி வாசலில் இருந்து கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை பல்வேறு குழுக்களாக 300 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டு காளைகளை தீரத்துடன் அடக்க முயன்று வருகின்றனர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள் மிதிவண்டிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஜல்லிக்கட்டுத் திடல் அருகே மருத்துவத்துறை, கால்நடைத் துறை சார்பில் முகாம் அமைக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
இப்போட்டியை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோ ர்பார்வையிட்டு வருகின்றனர். ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பவுல் ராஜ் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.