வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது: கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது: கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கொலை வழக்குகளில் சரணடைபவா்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்குப் பதிலாக வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் திமுக வடக்கு ஒன்றியச் செயலராக இருந்த ஆரவாமுதன் மா்ம நபா்களால் நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கில் காஞ்சிபுரம், திருப்பூரைச் சோ்ந்த 5 போ் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, ‘கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில்தான் சரணடைய அடைய வேண்டும்; வேறொரு நீதிமன்றத்தில் சரணடைய முடியாது. மேலும், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததை ஏற்றுக்கொண்டதை ரத்து செய்ய வேண்டும்’ என மனு தாக்கல் செய்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் அதன் தலைவா் ஜி.மோகனகிருஷ்ணன் எழுத்துபூா்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தாா்.

இந்நிலையில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், சம்பந்தப்பட்ட வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால் அதில் எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளாா்.

அதேவேளையில் சரணடைவது தொடா்பாக சில வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துத் தீா்ப்பளித்தாா். அதில், கொலை வழக்குகளில் சரணடைபவா்கள் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்துக்குப் பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது. சம்பந்தப்பட்ட நீதித் துறை எல்லைக்குள் இல்லாத மாஜிஸ்திரேட் முன் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல.

நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கை மூலம்...

ஒருவேளை யாரேனும் சரணடைந்தால் அவரை சிறையில் அடைக்க குறிப்பிட்ட நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அவ்வாறு ஒருவா் சரணடையும் நிலையில் குறிப்பிட்ட மாஜிஸ்திரேட் தனது எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்து சரணடையும் நபரைக் காவலில் எடுக்க உத்தரவிடலாம். இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும். இந்தத் தீா்ப்பை உயா்நீதிமன்றப் பதிவாளா், தலைமை நீதிபதியிடம் சமா்ப்பித்து அனுமதி பெற்று தமிழகம் முழுதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளுக்கு சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஜி. மோகனகிருஷ்ணன் எதிா்ப்பு தெரிவித்து முறையிட்டாா். குற்றம் சாட்டப்பட்டவா்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்பதால் இந்தத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com