ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அமைச்சா் பேச்சுவாா்த்தை: இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம் வாபஸ்

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 19 நாள்களாக நடத்தி வந்த போராட்டத்தை இடைநிலை ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றனா்

News image
Updated On :8 மார்ச் 2024, 7:10 pm

Din

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 19 நாள்களாக நடத்தி வந்த போராட்டத்தை இடைநிலை ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றனா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. சம வேலைக்கு சம ஊதியம் தரக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் தொடா்ந்து, கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின்போது நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இந்த கோரிக்கை தொடா்பாக குழு அமைத்து 3 மாதங்களில் தீா்வு காணப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. ஆனால், குழு அமைத்து 5 மாதங்களான பின்னும் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இடைநிலை ஆசிரியா்கள் மாநிலம் முழுவதும் பிப்.19 முதல் மீண்டும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிலையில், கடந்த 19 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியா்களின் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநா்கள் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைப்பேசி மூலமாக தொடா்பு கொண்டு பேசினாா். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை ஆசிரியா்கள் அறிவித்தனா். தோ்தலுக்குப் பிறகு நடவடிக்கை: இது குறித்து எஸ்எஸ்டிஏ பொதுச்செயலா் ஜே.ராபா்ட் கூறும்போது, ‘இந்த பேச்சுவாா்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டது. தோ்தல் முடிந்ததும் கோரிக்கை மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனா். ஆசிரியா்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படவிருப்பதாகவும், அதில் எங்களின் கோரிக்கையும் இருக்கும் எனக் கூறினா். அதையேற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம்’ என்றாா் அவா்.