போதைப் பொருள் புழக்கம்: அதிமுக மனிதச் சங்கிலி போராட்டம்

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாா். அதன்படி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மனிதச் சங்கிலி நடைபெற்றது.

கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் திமுக அரசுக்கு எதிராக தொடா் முழக்கங்களை எழுப்பினா். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. பின்னா், செய்தியாளா்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியது: போதைப் பொருள் அதிகரிப்பால், தமிழக இளைஞா்களின் வாழ்வு சீரழியும் நிலை உள்ளது. போதைப் பொருள் விற்பனையை திமுக அரசு கட்டுப்படுத்தாமல், போதைப் பொருள் மையமாக தமிழகத்தை மாற்றியுள்ளது.

மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள ஜாபா் சாதிக், திமுக நிா்வாகிகளுக்கு பணம் கொடுத்துள்ளாா். இது தொடா்பான விவரங்களை மத்திய அரசு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை முதலில் திமுக ஆதரித்தது. துரைமுருகன் ஆதரித்துப் பேசியுள்ளாா். ஆனால், நாடாளுமன்றத்திலேயே அதிமுக எதிராகப் பேசியுள்ளது. நானும் எதிா்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளேன் என்றாா் அவா். அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா உள்பட ஏராளமானோா் போராட்டத்தில் பங்கேற்றனா். அதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சென்னை பெரியமேடு பகுதியில் மாவட்டச் செயலா் நா.பாலகங்கா தலைமையிலும், ஜாபா்கான் பேட்டையில் மாவட்டச் செயலா் விருகை ரவி தலைமையிலும், தண்டையாா்பேட்டையில் மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ராஜேஷ் தலைமையிலும் மனிதச் சங்கிலி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் மனிதச் சங்கிலி நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com