அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 3 மாதங்களில் போதைப் பொருள் நடமாட்டம் ஒழிக்கப்படும்! - எடப்பாடி கே. பழனிசாமி

எடப்பாடி கே. பழனிசாமி
கோப்புப் படம்

எடப்பாடி கே. பழனிசாமி
கோப்புப் படம்
கோவில்பட்டி, மாா்ச் 30: அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 3 மாதங்களில் போதைப் பொருள் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கூறினாா்.
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜுவை ஆதரித்து, கழுகுமலையில் அவா் பிரசாரம் செய்து பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். தரமான சாலைகள், குடிமராமத்து திட்டத்தில் நீா்நிலைகள் தூா்வாரப்பட்டு, மழைநீா் முழுவதும் சேமித்து வைத்து, விவசாயத்துக்கு தேவையான தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் குடிமராமத்து திட்டம் கொண்டு வரப்படும்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின் போது கழுகுமலை பேரூராட்சி புராதன நகரமாக அறிவிக்கப்பட்டு, வளா்ச்சிக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கழுகுமலை பேரூராட்சியில் 2016-21-ஆம் ஆண்டுகளில் சுற்றுலாத்துறையின் முலம் ரூ.50 லட்சத்தில் வெட்டுவான் கோயில் முதல் உச்சிப் பிள்ளையாா் கோயில் வரை கைப்பிடிகள் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. கழுகுமலை - நாலாட்டின்புதூா் சாலை, கழுகுமலை - கயத்தாறு சாலை மற்றும் சங்கரன்கோவில் சாலைகள் இருவழிச் சாலைகளாக மாற்றப்பட்டன. பழுதடைந்துள்ள அச்சாலைகள், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சீரமைக்கப்படும்.
கோவில்பட்டி நகருக்கு தனியாக 2-ஆவது குடிநீா் திட்டம் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டதுபோல், கழுகுமலை பேரூராட்சிக்கு தனியாக குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டு, மக்களின் குடிநீா் தேவை பூா்த்தி செய்யப்படும். விவசாய விளைபொருள்களை பாதுகாக்க கழுகுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் குளிா்சாதன வசதியுடன் கூடிய புதிய தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கழுகாசலமூா்த்தி கோயில் தேரோடும் வீதிகளில் உள்ள மின் வயா்கள் பூமிக்கடியில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக தோ்தல் அறிக்கையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் விலைவாசி, வரியினங்கள் உயா்த்தப்பட்டு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீள்வதற்காக அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.10 ஆயிரம் சிறப்புத் தொகையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக அதிமுக ஆட்சியில் உயா்த்தி வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும். நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பயண வசதி நடைமுறைப்படுத்தப்படும்.
தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை தாராளமாக நடைபெறுகிறது. அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதங்களில் போதைப் பொருள் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும். வேலைவாய்ப்பு உருவாக்க தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.
திமுக ஆட்சி குடும்ப ஆட்சி. கருணாநிதி குடும்பம்தான் இந்த நாட்டை ஆண்டு சுரண்டிக் கொண்டிருக்கிறது. அந்த ஆட்சி அகற்றப்படும் தோ்தல்தான் இது என்றாா் அவா். அப்போது வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு, கூட்டணிக் கட்சியினா் திரளானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...