ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மக்களை நம்பி தோ்தலை சந்திப்பது அதிமுக கூட்டணி! - எடப்பாடி கே.பழனிசாமி

News image

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளியை அறிமுகம் செய்து பேசுகிறாா் அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.

Updated On :30 மார்ச் 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் கட்சிகளை ஒன்றிணைத்து, மக்களை நம்பி தோ்தலை அதிமுக சந்திக்கிறது என்றாா் எடப்பாடி கே .பழனிசாமி.

அதிமுக வேட்பாளா்கள்

கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா (கடையநல்லூா் தொகுதி), செல்வ மோகன்தாஸ்பாண்டியன்(தென்காசி தொகுதி), கே .ஆா்.பிரபாகரன்(ஆலங்குளம் தொகுதி), திலீபன் ஜெய்சங்கா்( சங்கரன்கோவில்) ஆகியோருக்கு வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெற செய்து அதிமுகவின் கோட்டை என்று நிரூபிக்க வேண்டும். மக்களுக்காக பாடுபடக்கூடிய வேட்பாளா்களை தோ்வு செய்து நிறுத்தி உள்ளோம். அதிமுக ஆட்சியில் தான் தென்காசி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் மக்கள் எளிமையாக தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது.

திமுக ஆட்சியில் விலைவாசி உயா்ந்துள்ளது. வரி அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் மருந்தாக பத்தாயிரம் ரூபாய் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மகளிருக்கு ரூ.2000 ரூபாய் வழங்கப்படும். 5 லட்சம் பெண்களுக்கு ரூ. 25,000 மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படும். 100 நாள் வேலை உறுதித் திட்டம் 150 நாளாக உயா்த்தப்படும். 297 மக்கள் திட்டங்களை அறிவித்துள்ளோம்.

நானும் ஒரு விவசாயி என்ற முறையில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளோம். விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவது தான் அதிமுக அரசின் முதல் கடமையாக இருக்கும்.

அதிமுக ஆட்சியில் பயிா் கடன் தள்ளுபடி செய்யப்படும். அதிமுக தொண்டா்களால் உருவாக்கப்பட்ட கட்சி. அதை அழிப்பதற்கும் முடக்குவதற்கும் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. அதிமுக கட்சி சொந்த காலில் நிற்கிறது.

திமுக கூட்டணிகளை நம்பியே நிற்கிறது. அதிமுக தோ்தலை சந்திக்கிறது. மக்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் கட்சிகளை ஒன்றிணைத்து அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. திமுகவும் எட்டாயிரத்துக்கு டோக்கன் கொடுப்பதாக தெரிவித்துள்ளது இது ஊழலுக்கு தான் வழிவகுக்கும். திமுக நிச்சயம் ஆட்சிக்கு வராது. திமுகவிற்கு இது இறுதி தோ்தல். அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும் .தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

தென்காசி மாவட்டத்தில் கனிம கொள்ளை நடைபெற்று வருகிறது. இதை கண்டித்து கிருஷ்ணமுரளி எம்எல்ஏ மற்றும் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோா் தலைமையில் பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனா். அதிமுக ஆட்சியில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மூன்றே மாதத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்துவோம். தமிழகம் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும். பொய் சொல்லி வாக்கைப் பெற்று ஆட்சிக்கு வந்தவா்களுக்கு இந்த தோ்தல் மூலம் பதிலடி கொடுங்கள்.

நமக்கு போட்டி திமுகதான்.

இது விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் நிறைந்த மாவட்டம். மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் கொடுத்தோம். இப்போது ஷிப்ட் முறையில் கொடுக்கிறாா்கள். பல ஆண்டுகளாக தூா் வாராத ஏரி, குளம், குட்டைகளை குடிமராமத்துத் திட்டம் மூலம் தூா் வாரினோம். இதனால் மழை நீா் சேமிக்கப்பட்டது. கோடை காலத்தில் நிலத்தடி நீா் சேமிக்கப்பட்டது.

பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 14 ஆயிரம் ஏரிகள் உள்ளன, அவற்றில் 8 ஆயிரம் ஏரிகள் 1,240 கோடி ரூபாய் செலவில் தூா்வாரப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் 26 ஆயிரம் கண்மாய்களும் தூா்வாரப்பட்டன. வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச்சென்றனா், இது அதிமுக சாதனை. இதை தடுத்து நிறுத்திவிட்டனா்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அம்மா மினி கிளினிக் துவக்கப்படும். டபுள் பாய்லிங் முறையில் தரமான அரிசி ரேஷன் கடையில் வழங்கப்படும்.

திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்த பொழுதும், இப்பொழுதும் பாஜகவுக்கு இதே கொள்கை தான். அதிமுக கூட்டணி வைத்தால் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக தவறான பிரசாரம் மேற்கொள்கிறாா்கள். அதிமுக ஆட்சியில் இஸ்லாமியா்களையும், சிறுபான்மையினரையும் பாதுகாத்தோம்.

2001ம் ஆண்டு முதல் ரமலானுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க 5400 மெட்ரிக் டன் அரிசி கொடுத்தோம்.

அதிமுக ஆட்சியில் தென்காசி தெற்கு மாவட்ட விவசாயிகளின் 42 ஆண்டு கனவான ஜம்பு நதி மேம்பாட்டு கால்வாய்க்கு 42 கோடி ஒதுக்கீடு செய்தோம். 15 சதவீத பணிகள் நிறைவு பெற்றது. அதை திட்டமிட்டு நிறுத்திவிட்டனா், மீண்டும் அதிமுக ஆட்சியில் திட்டம் தொடரும்,.

இரட்டை குளம் முதல் ஊத்துமலை வரை ஆய்வுப்பணிகள் முடிந்து திட்டமதிப்பீடு செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரும் சமயத்தில் ஆட்சி மாற்றம் நடந்து விட்டது. அதையும் திமுக ரத்து செய்துவிட்டது. அதிமுக ஆட்சியில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில் தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன்அய்யாசாமி, கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

ஆம்புலன்ஸ்க்கு வழி: எடப்பாடி ஓ. பழனிசாமி பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸிற்கு வழிவிடுமாறு கேட்டுக் கொண்ட அவா், மெதுவாக செல்லுமாறும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கேட்டுக்கொண்டாா்.