மெட்ரோ ரயில் பணி 2வது கட்டம்: நந்தம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ ரயில் பணி 2வது கட்டப் பணி தொடர்பாக நந்தம்பாக்கத்தில் மே முதல் வாரத்தில் இருந்து தற்காலிக சாலைப் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல், நந்தம்பாக்கம் மெட்ராஸ் போர் கல்லறை, பட்ரோடு மற்றும் பால் வெல்ஸ் ரோடு ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளுக்காக தற்காலிக போக்குவரத்து மாற்றம் மே 2024 முதல் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-ல் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

வழித்தடம் 5-ல் மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ.), ECV-02 (உயர்மட்ட கட்டுமானம்) தொகுப்பு CMBT-லிருந்து தொடங்கி காளியம்மன் கோயில் தெரு, மவுண்ட்-பூந்தமல்லி சாலை, பட் ரோடு, உள்வட்டச் சாலை வழியாக மேடவாக்கம் பிரதான சாலையுடன் ஒன்றிணைந்து சோழிங்கநல்லூர் வரை தொடர்கிறது.

நந்தம்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் போர் கல்லறை, பட் ரோடு மற்றும் பால் வெல்ஸ் ரோடு போன்ற சில இடங்களில் தற்போதுள்ள சாலையின் அகலம் குறுகலாக உள்ளதால், இந்த இடங்களில் கட்டுமானப் பணிகளைமேற்கொள்ள, மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் போரூரில் இருந்து தற்காலிகமாக ஒருவழிப் போக்குவரத்தை திசை திருப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட சாலை போக்குவரத்து மாற்றத்திற்கான திட்டம்.
பரிந்துரைக்கப்பட்ட சாலை போக்குவரத்து மாற்றத்திற்கான திட்டம்.

பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான காலி நிலத்தில் போர்கல்லறை, டிஃபென்ஸ் காலனி 1வது அவென்யூ, கண்டோன்மென்ட் சாலைகள், தனகோட்டி ராஜா தெரு, சிட்கோதொழிற்பேட்டை தெற்கு சாலை, ஒலிம்பியா சந்திப்பு வழியாக இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான நிலத்தின் வழியாக பரிந்துரைக்கப்பட்ட தற்காலிக சாலைப் போக்குவரத்து மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது.

இதனை ஏற்கனவே தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக நிறுவனம் மற்றும் கன்டோன்மென்ட் போன்ற பிறத் துறைகள் ஏற்றுக்கொண்டுள்ளன. பால்வெல்ஸ் சாலை மற்றும் பட் ரோடில் மெட்ரோ பணிகள் முடியும் வரை இந்ததற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சாலை போக்குவரத்து மாற்றத்திற்கானமேற்கண்ட நிலம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது புதர்களைஅகற்றும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சாலை மேம்பாட்டு பணிகள் 2 மாதங்களில் முடிக்கப்படும்.

பரிந்துரைக்கப்பட்ட தற்காலிக சாலைப் போக்குவரத்து மாற்றம் மே 2024 முதல் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com