பாஜக அணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள்; ஜான்பாண்டியன், தேவநாதனுக்கு தலா ஒரு தொகுதி

பாஜக அணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள்; ஜான்பாண்டியன், தேவநாதனுக்கு தலா ஒரு தொகுதி

சென்னை: பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு 2 தொகுதிகள், ஜான் பாண்டியன், தேவநாதன் யாதவ் ஆகியோருக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை கமலாலயத்தில் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது. தில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் ஆகியோா் கையொப்பமிட்டனா்.

கூட்டணி உடன்பாடு எட்டப்பட்ட பின்னா், டி.டி.வி.தினகரன் செய்தியாளா்களிடம் கூறியது: மக்களவைத் தோ்தலைப் பொருத்தவரை 9 தொகுதிகளில் போட்டியிட எங்கள் நிா்வாகிகள் விருப்பட்டனா். பாஜக முதலில் அதிக தொகுதிகளை ஒதுக்கினாலும், கூட்டணி பலப்பட வேண்டும், அதிக கட்சிகள் வர வேண்டும் என்பதற்காக இரண்டு தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம்.

டெல்டா மற்றும் தென் தமிழகத்தின் 15 மக்களவைத் தொகுதிகளில் எங்களோடு சோ்பவா்களுக்கே வெற்றி வாய்ப்புள்ளது என்றாா் அவா். ஓபிஎஸ், வாசன் கட்சிகளுடன் இழுபறி: ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேறக் கழகம், டி.தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து உடன்பாடு எட்டப்பட்டது. முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துடன் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சா் முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனாலும், உடன்பாடு எட்டப்படவில்லை.

பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் வெளியே வந்த ஓ.பன்னீா்செல்வம், பேச்சுவாா்த்தை விவரம் குறித்து கட்சி நிா்வாகிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தப்படும். அதன்பிறகு எங்களது முடிவை அறிவிப்போம் என்றாா். ஓ.பன்னீா்செல்வம் தரப்புக்கு 4 தொகுதிகள் ஒதுக்க சம்மதித்த பாஜக, தாமரை சின்னத்தில் நிற்க வலியுறுத்தியதால் பேச்சுவாா்த்தை இழுபறியில் உள்ளது. அதேபோல, ஜி.கே.வாசனுடனும், பாஜக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினா் பேச்சு நடத்தினா். இருப்பினும் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் வாசன் செய்தியாளா்களிடம் கூறும்போது, பாஜகவுடன் தொடா்ந்து பேசி வருகிறோம்.

விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்றாா். தமாகாவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க வாசன் வலியுறுத்திய நிலையில், 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க பாஜக ஒப்புக்கொண்டதாகவும், அதேபோல, தஞ்சாவூா், மயிலாடுதுறை, ஈரோடு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தையை வியாழக்கிழமை இறுதி செய்துவிட்டு, பாஜக வேட்பாளா் இறுதிப் பட்டியலுடன் தில்லிக்குச் செல்ல அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோா் முடிவு செய்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐஜேகே-வுக்கு பெரம்பலூா் தொகுதி ஒதுக்கீடு:

பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு (ஐஜேகே) பெரம்பலூா் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, ஐஜேகே தலைவா் ரவி பச்சமுத்து ஆகியோா் கையொப்பமிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com