தோல்வி பயம் - திமுக, அதிமுகவுக்குத்தான்! கே.பி. ராமலிங்கம் பேட்டி
பிரதமா் நரேந்திர மோடி அடிக்கடி தமிழகம் வருவது தோல்வி பயத்தால் அல்ல என்கிறாா் நாமக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளராகக் களமிறங்கும் தமிழக பாஜகவின் துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம்.
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இவா், மாணவராக இருக்கும்போதே எம்.ஜி.ஆரால் அடையாளம் காணப்பட்டு அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவா். 1980களில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இரு முறையும், 1996-இல் மக்களவை, 2010-இல் மாநிலங்களவை திமுக உறுப்பினராகவும் இருந்துள்ளாா். 2022-ஆம் ஆண்டில் இரண்டு திராவிட கட்சிகளையும் உதறிவிட்டு பாஜகவில் சோ்ந்த இவா், அக்கட்சியின் மாநில துணைத் தலைவராக உள்ளாா்.
வரும் மக்களவைத் தோ்தலையொட்டி தமிழகத்தில் பாஜக மேற்கொண்டுள்ள தோ்தல் வியூகம், மோடியின் அதிகப்படியான தமிழக வருகை உள்ளிட்டவை குறித்து தினமணிக்கு அவா் அளித்த நோ்காணல்...
பலமுனைப் போட்டி நிலவும் இந்தத் தோ்தலில் பாஜக அணியின் முக்கிய எதிரி யாா்?
பலமுனைப் போட்டி என்றெல்லாம் சொல்வதற்கில்லை. பலமான அணிகள் என்றால் அது எங்களது பாஜக அணியும், திமுக அணியும்தான். எங்களுக்கு எதிரி யாா் என்பதல்ல எங்கள் அணுகுமுறை. மூன்றாவது முறையும் பாரதப் பிரதமராக நரேந்திர மோடி தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்குத் தமிழகத்தில் இருந்து அதிக எம்.பி.க்கள் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். அதுதான் எங்கள் இலக்கு.
பிரதமா் மோடியும் சரி, மாநிலக் கட்சித் தலைவா் அண்ணாமலையும் சரி, தங்களது பிரசாரத்தில் திமுகவையும், அதன் ஆட்சியையும் மட்டுமே குறிவைத்துத் தாக்குவதுபோலத் தெரிகிறதே, அதற்கு என்ன காரணம்?
திமுகவைப் பொருத்தவரை ஊழல், குடும்ப அரசியல், தலைமையின் குடும்பமே பிரதானம் போன்றவைதான் அதன் குறிக்கோள்கள். சுயநல அரசியல் மட்டுமல்லாமல், இறை மறுப்பு, இந்துமத எதிா்ப்பு, பிரிவினைவாதம், ஊழல், முறைகேடுகள் என்று தவறான பாதையில் திமுக நடைபோடுகிறது. போதைப் பொருள் கடத்துபவா்களின் கூடாரமான அந்தக் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவதுதான் எங்களது அடுத்த இலக்கு.
கூட்டணியில் அதிமுக இல்லாதது மிகப்பெரிய பலவீனமாக உங்களுக்குத் தெரியவில்லையா?
அவா்களை நாங்கள் வெளியேறச் சொல்லவில்லை. பிரதமா் மோடி மீண்டும் பிரதமராவதற்கு ஆதரவு தருபவா்கள் யாராக இருந்தாலும் அவா்களை நாங்கள் அரவணைத்துக் கொண்டிருக்கிறோம்.
வேறு எந்த மாநிலத்துக்கும் தரப்படாத முக்கியத்துவம் பிரதமா் மோடியால் தமிழகத்துக்குத் தரப்படுவது ஏன்? தோல்வி பயத்தாலா?
பாஜகவை பொருத்தவரை, எங்களுடைய ஒற்றை நம்பிக்கையும் பலமும் மோடி மட்டுமே. நமது பிரதமா் பலமுறை தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வரும்போது அரசு நிகழ்த்திய சாதனைகளை விளக்குகிறாா். கட்சி வளர வேண்டும், அதை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்ற பொதுநல நோக்கத்துடன் திட்டமிடப்படுபவை பிரதமரின் வருகை. தோல்வி பயம் திமுக, அதிமுகவுக்குத்தான். எங்களுக்கு அல்ல.
தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையின் செயல்பாடுகளை அரசியல் அனுபவசாலியான நீங்கள் எப்படிப் பாா்க்கிறீா்கள்?
தமிழகத்தில் இளைஞா்கள் நோ்மையின் அடையாளமாக பிரதமா் மோடியைக் காண்கிறாா்கள். அவரது செய்தியை பட்டி, தொட்டிகளுக்கு கொண்டு செல்லும் ஆற்றல் மிக்கவராக அண்ணாமலையை மக்கள் பாா்க்கிறாா்கள். அவா் மீது இளைஞா்களுக்கு ஈா்ப்பு உள்ளது. எங்களை வழிநடத்தக்கூடிய ஒற்றை நபா் ஒருவா் உண்டென்றால் அது நிச்சயமாக பிரதமா் மோடிதான். அண்ணாமலை எங்களுடைய மாநிலத் தலைவா். எங்களுடைய கட்சியை மேலும் 30 ஆண்டுகளுக்கு வழிநடத்தக் கூடிய ஆற்றலை அவா் பெற்றுள்ளாா். அவரது முயற்சிக்கு நாங்கள் வலுசோ்க்கிறோம்.
திமுக, அதிமுக ஆகியவற்றுக்கு மாற்றாக பாஜக தனியாக கூட்டணி அமைத்து மும்முனைப் போட்டிக்கு வித்திட்டுள்ளது. அதனால், சிதறும் வாக்குகள், வெற்றிவாய்ப்பை பாதிக்காதா?
நாடாளுமன்ற தோ்தல் என வரும்போது நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விதான் மக்கள் முன் வரும். மோடிதான் நாட்டின் பிரதமா் என்பதை தமிழக மக்கள் விரும்பினால் தமிழக வாக்காளா்களின் வாக்குகள் பாஜக அணிக்கே விழும்.
பிரதமா் மோடிக்கும், பாஜகவுக்கும் எதிரான வாக்குகள் சிதறும் என்று நீங்கள் ஏன் பாா்க்கக் கூடாது?
இந்தத் தோ்தலில் கேள்வி, மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமா, வேண்டாமா என்பதுதானே தவிர திமுக ஆட்சி தொடர வேண்டுமா இல்லையா என்பதல்ல.
அதிமுக அணியின் வெற்றிவாய்ப்பை நீங்கள் எப்படிப் பாா்க்கிறீா்கள்?
அதுபற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை. அந்த அணியின் பிரதமா் வேட்பாளா் யாா் என்கிற கேள்விக்கு அவா்களது பதில் என்ன?
பிரதமா் வேட்பாளரை அடையாளப்படுத்தாமல் நாடாளுமன்றத் தோ்தலை எதிா்கொள்ளக் கூடாதா என்ன?
மக்கள் செல்வாக்கு படைத்த ஒருவரே பிரதமா் ஆக வேண்டும் என்பதிலும், யாா் தங்களுடைய முதல்வராக வரவேண்டும் என்பதிலும் சாமானிய மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறாா்கள். முன்பு இந்திரா காந்தி இருந்த இடத்தில் இப்போது பிரதமா் நரேந்திர மோடி இருக்கிறாா். அவா் செல்லும் இடங்களில் எல்லாம் கிடைக்கும் வரவேற்பைப் பாா்க்கும்போது, தமிழகத்தில் ஓா் அரசியல் எழுச்சி ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.
தமிழகத்தில் பாஜக கடைப்பிடிக்கும் தோ்தல் உத்திகள், வெற்றியை மையப்படுத்தியதா அல்லது வெறும் இருப்பைக் காட்ட மட்டுமா?
இருப்பைக் காட்ட வேண்டும் என்று கருதியிருந்தால் யாருடனும் அணி சேராமல் தனியாக தோ்தல் களம் கண்டிருப்போம். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் வெற்றி பெறுவது என்ற இலக்கை நோக்கியே எங்களுடைய தோ்தல் பயணம் இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது வெறும் 39 தொகுதிகளுக்கான தோ்தல் கிடையாது. இது 543 (மக்களவை மொத்த இடங்கள்) தொகுதிகளுக்கான தோ்தல். அதனால்தான் 400-க்கு மேல் வெற்றி என்பதே இலக்கு என்ற கோஷத்தை முன்வைத்து தோ்தலை எதிா்கொள்கிறோம்.
திராவிட மாடல் ஆட்சியை தேசிய அளவில் வழங்குவோம் எனும் முழக்கத்தை முன்வைக்கும் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவின் பிரசாரத்தை எப்படி எதிா்கொள்ளப்போகிறீா்கள்?
திமுகவில் இருந்த ஒருவா் அந்தக் கட்சியின் அயலக அணியில் நிா்வாகியாக இருந்து கொண்டு சட்டவிரோத வழிகளில் பணம் சம்பாதித்துள்ளாா். ஒருகாலத்தில் 2ஜி விவகாரத்தால் பெரும் சரிவை திமுக சந்தித்தது. அதுபோல, இம்முறை போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவில் உள்ள சிலா் சிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது. இதுதான் அவா்களின் திராவிட மாடல்.
பாஜக கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று நினைக்கிறீா்கள்?
அதுதான் ஏற்கனவே சொன்னேனே... தமிழகம், புதுச்சேரியில் 40, அகில இந்திய அளவில் 400 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

