சேலம் பிரசார மேடையில் மு.க. ஸ்டாலின்
சேலம் பிரசார மேடையில் மு.க. ஸ்டாலின்

மதத்தால் மக்களை பிரிக்கிறது பாஜக: மு.க. ஸ்டாலின்

மதத்தால், சாதியால் மக்களை பிளவுபடுத்த பாஜக முயற்சிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மக்களவைத் தொகுதி செல்வகணபதி, கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசனை ஆதரித்து பெத்தநாயகன்பாளையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ரெளடிகள், குற்ற வழக்குகள் உள்ளவர்களை தனது கட்சியில் வைத்துக்கொண்டு சட்டம் - ஒழுங்கைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசலாமா?

போதைப்பொருள் அதிகமாக கைப்பற்றப்பட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது.

எங்கும் ஹிந்தி, எதிலும் ஹிந்தி எனும் வேலையைத்தான் பாஜக பார்க்கிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை உள்ளதாக புதிய புரளியை பேசுகிறார். மணிப்பூரில் இல்லாத சட்டம் ஒழுங்கு பிரச்னையா மற்ற மாநிலங்களில் இருக்கப்போகிறது. மணிப்பூரில் பாஜக ஆட்சிதானே நடக்கிறது.

திமுக இருக்கும் வரைக்கும் தமிழ்நாட்டில் மோடி ஆட்டம் செல்லாது. தமிழகத்தை புண்ணியபூமி எனக்கூறும் நரேந்திர மோடி வெள்ளம் வந்தபோது ஏன் வந்து பார்க்கவில்லை.

பெரியாரின் மண்ணில் பாஜகவின் ஆட்டம் எத்தனை ஆண்டுகளானாலும் அரங்கேறாது

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது திடீரென பிரதமர் மோடிக்கு அக்கறை எழக் காரணம் என்ன? பெண்கள் பற்றி பேசும் மோடி ஆட்சியில்தன் பாஜக எம்.பி.யால் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொல்லைக்கு ஆளானார்கள்.

பாஜகவில் வேட்பாளர்கள் இல்லை என்பதால், சட்டப்பேரவை உறுப்பினர்களும், ஆளுநரும் போட்டியிடுகின்றனர். நோட்டாவை விட அதிக வாக்குகள் பெற வேண்டும் என்பதே பாஜகவின் இலக்காக உள்ளது என மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com