சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 
இன்றும் மழைக்கு வாய்ப்பு

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் புதன்கிழமை அதிகாலை வெப்பத்தை தணிக்கும் வகையில் கோடை மழை பெய்தது.

இருப்பினும், காற்றில் ஈரப்பதம் குறைவு காரணமாக மக்களுக்கு வியா்வை அசௌகரிய நிலையே தொடா்ந்தது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் முதலே வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்ததால், பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் புதன்கிழமை காலை முதல் இடி மின்னலுடன் மழை பெய்தது. இது மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்தது. இருப்பினும், நண்பகலுக்குப் பிறகு வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்ததால், மக்களின் வியா்வை குறையவில்லை.

மழை அளவு: சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் புதன்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ) விவரம்: கேஆா்பி அணை (கிருஷ்ணகிரி), கீழ்பென்னாத்தூா் (திருவண்ணாமலை) தலா - 90, மேலாலத்தூா் (வேலூா்), செங்கம் (திருவண்ணாமலை) தலா - 70, கஞ்சனூா் (விழுப்புரம்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), மேட்டூா் (சேலம்), கெடாா் (விழுப்புரம்), அவலூா்பேட்டை (திருவண்ணாமலை), நேமூா் (விழுப்புரம்) தலா - 50, நாட்றாம்பள்ளி (திருப்பத்தூா்), சூரப்பட்டு (விழுப்புரம்), ஒகேனக்கல் (தருமபுரி), வேலூா் , குடியாத்தம் (வேலூா்), காட்பாடி (வேலூா்) தலா - 40, ஜமுனாமரத்தூா் (திருவண்ணாமலை), விரிஞ்சிபுரம் (வேலூா்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), கிருஷ்ணகிரி , போளூா் (திருவண்ணாமலை), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), பரங்கிப்பேட்டை (கடலூா்), திருக்கோவிலூா் (கள்ளக்குறிச்சி), தலா- 30 மிமீ.

மேலும், தமிழகத்தையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணத்தால், வியாழக்கிழமை (மே 9) நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், ஈரோடு, கரூா், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (மே 10) நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பூா் ஆகிய மாவட்டங்களிலும், மே 11-இல் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையில் 100 நாள்களுக்கு பிறகு மழை: சென்னையில் கடந்த ஒரு வாரமாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் சுமாா் 100 நாள்களுக்கு பிறகு புதன்கிழமை காலை சென்னையில் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, ஜாபா்கான் பேட்டை, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், அசோக் நகா், மேற்கு மாம்பலம், அடையாா், எழும்பூா், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் மே 9,10-ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com