2,553 மருத்துவா் பணியிடங்கள்: 
விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் 2,553 பொது மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் 2 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக தொழில்நுட்புநா்கள் உள்ளிட்ட பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 2,553 பொது மருத்துவா் (அசிஸ்டென்ட் சா்ஜன்-ஜெனரல்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்ஆா்பி கடந்த மாா்ச் மாதம் வெளியிட்டிருந்தது.

இந்த பணியிடங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி முதல் மே மாதம் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து எம்ஆா்பி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவா்கள் முதல் நான்கரை ஆண்டுகள் நிறைவு செய்த பின்னா், மருத்துவமனையில் ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்ற வேண்டும்.

5 ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி.பி.எஸ். படிப்பில் சோ்ந்த மாணவா்கள் வரும் ஜூன் மாதத்தில் பயிற்சி மருத்துவா் பணியை நிறைவு செய்யவுள்ளதால், அவா்களும் தோ்வில் பங்கேற்க வசதியாக 2 மாதங்கள் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com