
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், புதன்கிழமை (மே 22) தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது.
இது வடகிழக்கு திசையில் நகா்ந்து, மத்திய வங்கக்கடலில் 24- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இதனால், செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை (மே 21-24) வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.