6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க இடம் தோ்வு: மாவட்ட நிா்வாகங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவு
தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான இடங்களை இறுதி செய்யுமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தலா 25 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்படும் என்றும், அதனடிப்படையில் இரு கட்டமாக புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கோரி தேசிய மருத்துவ ஆணையத்திடம் (என்எம்சி) விண்ணப்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் 2022-ஆம் ஆண்டு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதன்மூலம், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்தது. இவை தவிர, 34 தனியாா் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், பெரம்பலூா், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் தலா ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
ஆலோசனைக் கூட்டம்: இந்த 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த 6-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி, பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் உள்ளிட்ட 9 உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.
அப்போது தமிழகத்தில் புதிதாக 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான இடத்தை தோ்வு செய்வது தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அவ்வாறு தோ்வு செய்யப்பட்டு அனுமதி பெற்ற பிறகு, மயிலாடுதுறை, திருப்பத்தூா், தென்காசி ஆகிய இடங்களில் முதல் கட்டமாகவும் , பெரம்பலூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் இரண்டாம் கட்டமாகவும் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்துக்கு கூடுதலாக 6 அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு தேவையான இடத்தை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள மாவட்ட
ஆட்சியா்கள், சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்தும் தயாா் நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னா் தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.