
தீபாவளிக்கு முன்பு ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையான வெங்காயத்தின் விலை, தீபாவளி பண்டிகைக்குப் பிறகு ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கி தற்போது மொத்த விற்பனையகங்களில் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது.
ஒரு சில நாள்களில் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.40 வரை உயர்ந்திருப்பது மக்களுக்கு வெங்காயத்தை வாங்கும்போதே கண்ணீரை வரவழைத்திருக்கிறது.
இந்தநிலையில், மதுரை மாவட்டம் மேலூரில் இன்று காலை விற்பனை தொடங்கிய நிலையில், ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருவது தெரிய வந்துள்ளது.
மேலூரில் தினசரி சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. 100 ரூபாயை தொட்டிருக்கிறது வெங்காயம் விலை. பெரிய வெங்காயம் ரூ.100க்கும், சின்ன வெங்காயம் ரூ.80க்கும் விற்பனையாகும் நிலையில், ஆறுதல் பரிசாக தக்காளி மட்டும் விலை குறைந்து ரூ.25க்கு விற்பனையாகிறது.
சென்னையில் இன்று ஒரு கிலோ வெங்காயம் மொத்த விற்பனைக் கடையில் ரூ.70க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனை கடைகளில் ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனையாகி வருகிறது.
பொதுவாக வெங்காயம், தக்காளி இல்லாமல் எந்த உணவும் தயாரிக்க முடியாது என்ற நிலையில், இதன் விலை ஏற்றங்கள் வீட்டின் மாதாந்திர பட்ஜெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில், தில்லி மற்றும் மும்பையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பின் நவம்பர் மாதம் வெங்காயம் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது.
விலை கடுமையாக உயர்வதால், வாங்குபவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் கவலை ஏற்பட்டுள்ளது. மக்கள் வாங்குவதைக் குறைத்துக்கொண்டால், அதிக விலை கொடுத்து வெங்காயத்தை வாங்கி அதனை விற்பதில் சிரமம் ஏற்படுமே என்ற அச்சமும் நிலவுகிறது.
ஒருபக்கம், என்னதான் விலை உயர்ந்தாலும் வெங்காயம் வாங்குவதை மக்கள் தவிர்க்கவே முடியாது என்பதாலும், வரத்து குறைந்திருப்பதாலும் நாளுக்கு நாள் வெங்காயம் விலை உயர்ந்துதான் வருவதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.
ஒரு வாரத்துக்குத் தேவையான அளவுக்கு இரண்டு கிலோ என வெங்காயம் வாங்கும் மக்கள் தற்போது இரண்டு நாளைக்குப் பார்க்கலாம் என அரைக்கிலோ அல்லது ஒருக்கிலோ மட்டுமே வாங்கிச் செல்லும் நிலையும் காணப்படுகிறது.
பொதுவாக தீபாவளி வரை பொருள்களின் விலையேற்றம் காணப்படும் என்ற நிலையில் தீபாவளி முடிந்தும் விலையேற்றம் தொடர்வது நடுத்தர மக்களை கவலையடையச் செய்திருக்கிறது.
இன்னும் தீவிர மழைக்காலம் தொடங்காத நிலையில், இப்போதே வெங்காயம் விலை ரூ.100ஐத் தாண்டினால் அடுத்தடுத்த வாரங்களில் தங்கம் விலை போல மாறுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.