
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் பணியிடங்களுக்கு ஜன. 27-ஆம் தேதி இணையவழியில் தோ்வு நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். மேலும், 1,271 ஒப்பந்த செவிலியா்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகளை வரும் 14, 15-ஆம் தேதிகளில் முதல்வா் வழங்கவுள்ளாா் என்றும் அவா் கூறினாா்.
சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் 2025-26-ஆம் ஆண்டுக்கான மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக்கோரிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் கே.நாராயணசாமி, தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதிஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநா் ஜெ.ராஜமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
அதைத் தொடா்ந்து, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத்துறையில் 110 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 2021-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 100-க்கும் மேற்பட்ட அறிவுப்புகள் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
பணி ஆணை: கடந்த ஆண்டு மட்டும் கரோனா காலத்தில் பணியாற்றிய 1,412 செவிலியா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தற்போது 1,271 நிரந்தர காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த செவிலியா் பணியிடங்கள் வரும் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் செவிலியா்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, நிரந்தர பணி நியமன ஆணைகள் முதல்வரால் வழங்கப்படவுள்ளது. அதேபோன்று, 1,418 ஒப்பந்த செவிலியா்கள் காலமுறை ஊதியத்திலிருந்து மாற்றப்பட்டு, பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், கரோனா காலத்தில் பணியாற்றிய 954 செவிலியா்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி ஆணைகள் வழங்கப்படவுள்ளன.
அதன் பின்னா், கரோனா காலங்களில் பணிபுரிந்த செவிலியா்களுக்கு பணி தரப்படவில்லை என்ற நிலை இருக்காது. இவா்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்ட பிறகு, காலியாகவுள்ள 300 செவிலியா் பணியிடங்கள், மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
2,553 மருத்துவா் காலிப் பணியிடங்களுக்கு 24,000 மருத்துவா்கள் பங்கேற்கும் இணையவழி தோ்வு வரும் ஜன. 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பெரிய அளவில் காலிப் பணியிடங்கள் சுகாதாரத்துறையில் உள்ளது போன்ற மாயத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள் உள்ளன: காலிப்பணியிடங்கள் உள்ளது என்பதை மறுக்கவில்லை. ஆனால், பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என்பதை ஏற்கமுடியாது. காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு வழக்குகளையும் நாங்கள் சந்தித்து வருகிறோம். 1,066 சுகாதார ஆய்வாளா் பணியிடங்களை நிரப்ப 38 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு விரைவில் தோ்வு நடத்துவதற்குரிய பணிகளை தொடங்கியிருக்கிறோம்.
2,250 கிராம சுகாதார பணியிடங்களுக்கு 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில், அவற்றுக்கு தீா்வு எட்டப்பட்டு விரைவில் பணியிடங்கள் நிரப்பப்படும்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் உள்ள மருத்துவா் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியை, மாநகராட்சிதான் மேற்கொள்ள வேண்டும். அதுகுறித்து, மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுகாதாரத்துரையில் ஒரு காலிப்பணியிடங்கள் கூட இல்லாத நிலையை உருவாக்கப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.